மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ்
திரிணாமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் வலிமையான மார்க்சிஸ்ட் அரசை வீட்டுக்கு அனுப்பிய கட்சி. இரும்பு பெண்மணி மம்தாவால் வழிநடத்தப்பட்ட இந்தக் கட்சி, 15 ஆண்டுகள் அந்த மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்தது.
மம்தாவின் அரசியல் வாழ்க்கை
2007ம் ஆண்டு நடந்த நந்திகிராம் நிலம் கையகப்படுத்துதல் எதிர்ப்புப் போராட்டம், மம்தா பானர்ஜியின் அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனை என்றால், அது மிகையாகாது.
ஃபயர் பிராண்ட் அரசியல்வாதி
மேற்கு வங்கத்தின் அப்போதைய ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக அவர் ‘மா, மாட்டி, மனுஷ்’ (தாய், தாய்மண், மக்கள்) என்ற முழக்கம், 2011- அவரை மேற்கு வங்கத்தின் முதல்வராக்கியது.
ஒரு ஃபயர் பிராண்ட் அரசியல்வாதியாக உருவெடுத்த அவர், டைம்ஸ் இதழின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலை அலங்கரித்தார்.
15 ஆண்டுகள் திரிணாமூல் ஆட்சி
2011 தொடங்கி அடுத்தடுத்து ஆட்சியை தக்கவைத்து மேற்கு வங்க மாநில முதல்வராக ஹார்ட்ரிக்கும் அடித்தார். 4-வது முறையாகவும் அவர் ஆட்சியமைப்பதை அவர் எதிர்பார்த்தார். ஏன் சில கருத்துக் கணிப்புகளும் கூட ‘மம்தா வரலாறு படைப்பார்’ என்றெல்லாம் வரிந்துகட்டி எழுதின.
ஆட்சியை பறிகொடுத்த மம்தா
ஆனால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 293 தொகுதிகளில் 215 இடங்களில் வெற்றி பெற்ற திரிணமூல் காங்கிரஸ் 2026 தேர்தலில் வெறும் 80 இடங்களில்தான் வென்றது. 206 இடங்களுடன் மேற்கு வங்கத்தை கைப்பற்றியது பாஜக.
தேர்தல் வெற்றி, தோல்விகள், ஆட்சி மாற்றங்கள் இயல்பே என்றாலும் கூட, இந்தத் தோல்வி திரிணமூல் காங்கிரஸ் பிளவை நோக்கி சென்றது.
மம்தாவுக்கு எதிராக போர்க்கொடி
தோல்விக்குப் பின்னர் ஓர் இயக்கம் மீண்டெழ வேண்டுமானால், அதன் தலைமையை நோக்கி அத்தனை பேரும் திரள வேண்டும். ஆனால், திரிணமூல் காங்கிரஸில் அது நடக்கவில்லை. மம்தாவுக்கு எதிராக கலகம் வெடித்தது.
60 எம்எல்ஏக்கள் தனி அணி
60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் தனி அணியாக பிரிந்து, சட்டசபையில் எதிரக்கட்சித் தலைவர் பதவியையும் கைப்பற்றி, மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
20 எம்பிக்கள் கட்சித் தாவல்
இன்னோரு பக்கம் லோக்சபா எம்பிக்கள் 20 பேர் மம்தா தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக தலைமையிலான என்டிஏவில் இணைய விரும்புவதாகவும், மக்களவையில் தங்களை தணி அணியாக கருதுமாறும் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதினர்.மேலும் திரிபுராவை சேர்ந்த ஒரு கட்சியிலும் அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டனர்.
ராஜ்யசபா எம்பிக்கள் ராஜினாமா
தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டும் வகையில், ராஜ்யசபா எம்பிக்கள் மூன்று பேர் ராஜினாமா செய்தனர். எனவே, அங்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. மூன்று இடங்களையும் பாஜக கைப்பற்றுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மம்தா சறுக்கியது எங்கே?
கொல்கத்தாவில் தொடங்கிய எதிர்ப்பு, டெல்லி வரை நீடிக்கிறது. தனக்கு அடுத்த அரசியல் வாரிசாக மருமகன் அபிஷேக் பானர்ஜியை மம்தா அடையாளம் காட்டியதும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
சாமார்த்தியமாக காய் நகர்த்திய பாஜக
இந்த இடத்தில்தான் பாஜகவின் சாதுர்யத்தையும் நாம் பார்க்கவ வேண்டும். மாநிலக் கட்சிகள் பல தேசிய அரசியலில் அதீத தலையீடு செய்வது, உட்கட்சிக்குள் ஏதேனும் உரசல், விரிசல் என்றால் அதிருப்தியாளர்களுக்கு மத்தியில் ஆளும் கட்சியையும் ஒரு வாய்ப்பாக முன்னிறுத்துகிறது.
பாஜக 21 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. 3-வது முறையாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, மாநில அரசியல் களங்களில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
மம்தா பானர்ஜி அதிரடியாக நீக்கம்
இந்தநிலையில் தான் யாரும் எதிர்பாராத விதமாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் தலைவருமான மம்தா பானர்ஜி தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி முகாம் அறிவித்துள்ளது.
புதிய தலைவரும் தேர்வு
தங்களின் அணியே உண்மையான திரிணமூல் காங்கிரஸ் என்று பிரகடனப்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து, மம்தாவுக்குப் பதிலாக மூத்த சட்டமன்ற உறுப்பினர் அரூப் ராயைப் புதிய தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது.
கொல்கத்தாவில் அதிருப்தி குழு கூட்டம்
கொல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இந்த அதிருப்தி குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரிதாபிரதா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மம்தா பானர்ஜி மற்றும் அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் படங்கள் மேடையில் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருந்தன.
தேசிய செயற்குழு சட்ட சிக்கல்
கட்சி விதிமுறைகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய செயற்குழு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும், 2022 பிப்ரவரிக்குப் பிறகு இந்த அமைப்பு புதுப்பிக்கப்படாததால் கட்சியில் அரசியலமைப்பு சட்டச் சிக்கல் எழுந்துள்ளதாக ரிதாபிரதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் ஹவுரா சென்ட்ரல் தொகுதி எம்.எல்.ஏ அரூப் ராய் கட்சியின் புதிய தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் ஆணையம் கையில் முடிவு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிதாபிரதா பானர்ஜி “நாங்கள் கட்சியின் விதிமுறைகளின்படியே இந்தச் சிறப்பு அமர்வைக் கூட்டியுள்ளோம். இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் முறைப்படி இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
முதன்மை ஆலோசகர் பதவி - மம்தாவுக்கு ஆஃபர்
எது சரி, எது தவறு என்பதை ஆணையமே தீர்மானிக்கும். மம்தா பானர்ஜி விரும்பினால், எங்களின் புதிய அமைப்பின் முதன்மை ஆலோசகராக இருக்க தாராளமாக வரலாம்" என்று கூறினார்.
கேள்விக்குறியான எதிர்காலம்
71 வயதான மம்தா பானர்ஜியின் அரசியல் எதிர்காலமும், அவர் 1997-ல் தொடங்கிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலமும் பெரும் கேள்விக்குறியதாக மாறி நிற்கிறது.
=============================