Due to the sudden stoppage of cylinder supply to hotels, food service has been affected. google
இந்தியா

வணிக சிலிண்டர் சப்ளை நிறுத்தம் : ஓட்டல்களில் உணவு தயாரிப்பு பாதிப்பு, பொதுமக்கள் அவதி

Commercial Gas Cylinder Stopped News in Tamil : ஓட்டல்களுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டர் சப்ளை திடீர் நிறுத்தபட்டு இருப்பதால், உணவு பொருட்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Kannan

ஈரான் போர்

Commercial Gas Cylinder Stopped News in Tamil : ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் 11வது நாளாக நீடிக்கிறது. இதன் பாதிப்புகள் உலக அளவில் எதிரொலிக்க தொடங்கி இருக்கின்றன. பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

சிறிய நாடுகள் பாதிப்பு

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், பள்ளிகளுக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. போரால் சிறிய நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

போரின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது. கத்தாரில் இருந்து இயற்கை எரிவாயு கொண்டு வருவது தடைபட்டு இருப்பதால், சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு உயர்த்தியது.

அதன்படி, வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையை ரூ.60 உயர்த்தியது. சிலிண்டர் விலை ரூ.868.50லிருந்து ரூ.928.50 ஆக உயர்ந்தது.

வணிக சிலிண்டர் விலையும் அதிகரிப்பு

இதேபோன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் 115 வரை உயர்த்தப்பட்டது. சென்னையில் சிலிண்டர் விலை ரூ.2043.50 ஆக உயர்ந்தது. முதல் முறையாக சிலிண்டர் விலை ரூ.2 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிலிண்டர் பெறக் கட்டுப்பாடு

வீட்டு உபயோகத்திற்காக ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 21 நாட்கள் கழித்தும், 2 சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 30 நாட்கள் கழித்தும் தான் புதிய சிலிண்டருக்கு பதிவு செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் சப்ளை நிறுத்தம்

இந்தநிலையில், இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி வருவதால், வணிக பயன்பாட்டு சிலிண்டர்களின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஓட்டல்களில் உணவு தயாரிப்பு பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

ஓட்டல் உரிமையாளர்கள் கோரிக்கை

இதுதொடர்பாக, ஓட்டல் உரிமையாளர்கள் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ உணவகங்கள் மற்றும் உணவு தொழில்களில் பயன்படுத்துவதற்கான வணிக ரீதியான எல்பிஜி சப்ளை பற்றாக்குறை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஐடி நிறுவனங்கள், கல்லூரி விடுதி மாணவர்கள், ரயில் பயணிகள் பாதிக்கப்படுவார்கள்.

உணவு தயாரிப்பு பாதிப்பு

பல்வேறு மருத்துவமனைகளுக்காக உணவு பொருட்கள் தயாரிப்பு 24*7 அடிப்படையில் இயங்கி வருகிறது. வணிக ரீதியான எல்பிஜி சப்ளை தடைபட்டால் இந்த பணிகள் அனைத்தும் பாதிக்கப்படும்.

ஸ்டார் ஓட்டல்களுக்கு சிக்கல்

அது மட்டுமல்லாமல் பல்வேறு நட்சத்திர விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள உணவு விருந்து முன்பதிவுகளும் பாதிக்கப்படும்.

வணிக ரீதியான எல்பிஜியின் தட்டுப்பாடு தமிழ்நாடு முழுவதும் உள்ளது. இதனால் பொதுமக்களின் தேவைகளும் கடுமையாக பாதிக்கப்படும்.

விநியோகத்தை முறைப்படுத்துக

எனவே எண்ணெய் நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு, எல்பிஜியை அத்தியாவசியப் பொருளாக கருதி உணவுத் தொழிலுக்கு எந்தத் தடையுமின்றி விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

ஓட்டல்கள் மூடப்படுமா?

ஓட்டல்களுக்கு விநியோகிக்கப்படும் வணிக சிலிண்டர் நிறுத்தப்பட்டுள்ளதால் ஓட்டல்கள் இனிமேல் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமும் சிலிண்டர்கள் தேவைப்படும்

ஏனென்றால் ஓட்டல்களின் தேவையை பொறுத்து தினசரி சிலிண்டர் விநியோகம் இருக்கும். தினமும் 10 முதல், அதிகபட்சமாக 50 சிலிண்டர்கள் வரை தேவைக்கேற்ப ஓட்டல்கள் வாங்குகின்றன. ஸ்டாக் என்பது வைப்பது வைப்பது கிடையாது.

உணவு தயாரிப்பதில் சிக்கல்?

தற்போது சிலி்ண்டர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால் மறுநாள் கடைகளில் உணவு பொருட்கள் தயாரிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அதே நேரத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவு பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஓட்டல்களில் மெனுக்கள் குறைப்பு

பிரபலமான ஓட்டல்கள் சிலிண்டர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் வகையில், மெனு வகைகளை குறைத்துள்ளன.

=====