Election Commission Clarifies Internal Differences Over Voter List Revision
ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷிக்கும் இடையே பல்வேறு முடிவுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
கடந்த 10 மாதங்களில் தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறி, குறைந்தபட்சம் 14 முறை தேர்தல் ஆணையர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டது.
படிவம் 6 மற்றும் வாக்காளர் நீக்கம் குறித்த ஆட்சேபம்
புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ல் மாற்றங்கள், வாக்காளர் தரவுத் தளத்தை மையப்படுத்துதல் மற்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பின் போது பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பெயர்கள் மொத்தமாக நீக்கப்பட்டது தொடர்பாகத் தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக ஆணையர்கள் ஆட்சேபத்தைப் பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மாறுபட்ட கருத்து இயல்பானது தேர்தல் ஆணையம் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், "எந்தவொரு அமைப்பிலும் விவாதங்களின் போது மாறுபட்ட கருத்துகளும் கண்ணோட்டங்களும் இருப்பது இயல்பான அங்கமாகும்.
தேர்தல் முறையை மேம்படுத்தத் தேர்தல் ஆணையர்கள் வழங்கிய ஆலோசனைகள், தேர்தல் நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவதாகவே இருந்தன" என்று தெரிவித்துள்ளது.
உத்தரவுகள் அனைத்தும் சட்டப்பூர்வமானவை
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ உத்தரவுகள் மற்றும் முடிவுகள் அனைத்தும், 'தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சட்டம், 2023'-ன் கீழ் நிறுவப்பட்ட சட்டப்பூர்வ நடைமுறைகளைப் பின்பற்றி முழு சட்ட அங்கீகாரத்துடனேயே வெளியிடப்படுகின்றன என ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவுகள்
சமீப காலங்களில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட சுமார் 40 புதிய சீர்திருத்தங்கள் மற்றும் முடிவுகள் அனைத்தும் ஆணையம் ஒருமனதாக எடுத்தவைகளின் விளைவே ஆகும்.
ஜனநாயகத்தை மேம்படுத்துவதில் தனது அரசியல் சாசனக் கடமைகளை முழுமையான நேர்மையுடன் நிறைவேற்றுவதில் தேர்தல் ஆணையம் உறுதியுடன் உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
=======