Election Commission decided closely monitor expenses of candidates contesting five state assembly elections google
இந்தியா

Assembly Elections 2026 : வேட்பாளர் 40 லட்சம் மட்டுமே செலவு செய்ய முடியும் : சாட்டையை சுழற்றும் தேர்தல் ஆணையம்!

5 States Assembly Elections 2026 : ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலை ஒட்டி போட்டியிடும் வேட்பாளரின் செலவினங்களை தீவிரமாக கண்காணிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Kannan

ஐந்து மாநிலத் தேர்தல்

5 States Assembly Elections 2026 : தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் தேதிகள் வரும் 15 அல்லது 16ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் மட்டும் பல கட்டங்களாகவும், மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருக்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல்

இந்தநிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. அரசியல் கட்சிகள் பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளன. கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு, சொந்த சின்னத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டி என்ற கணக்கீடுகளும் நடைபெற்று வருகிறது.

தேர்தல் ஆணையம் அறிவுரை

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலுக்காக செலவு செய்யும் தொகை தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. வேட்பாளர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக செலவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

வேட்பாளர் செலவு ரூ.40 லட்சம்

2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் தங்களது தேர்தல் பிரச்சாரத்திற்காக அதிகபட்சமாக 40 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொகையை மீறி, வேட்பாளர்கள் செலவு செய்தால் அது ஊழலாக கருதப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. .

தகுதி நீக்கம், சட்ட நடவடிக்கை

* 1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஒரு வேட்பாளர் 40 லட்சம் ரூபாய்க்கு மேலும் ஒரு ரூபாய் செலவு செய்தாலும் அது ஊழல் குற்றமாக பதிவு செய்யப்படும்.

* தேர்தல் ஆணையத்திடம் செலவு கணக்குகளை சமர்ப்பிக்கும் போது, போலியான கணக்குகளை தாக்கல் செய்யப்பட்டது தெரிந்தால், அந்த வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தால் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

* தகுதி நீக்கம் மட்டும் இல்லாமல், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எந்த ஒரு தேர்தலிலும் அந்த வேட்பாளர் போட்டியிட தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்குகள் கண்காணிப்பு

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் வேட்பாளர்களின் உண்மையான செலவு கணக்குகளை கண்காணிக்க, அவர்களின் சொந்த வங்கி கணக்குகள் மட்டும் இன்றி அவர்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வங்கி கணக்குகளும் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

தேர்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் இவை இருக்கும் என்பதால், தவறு செய்யும் வேட்பாளர்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது.

வேட்பாளர்களின் செலவு விவரங்கள்

தேர்தலில் நிற்கும் ஒரு வேட்பாளரின் செலவுகள் சட்டத்திற்கு உட்பட்டவை மற்றும் சட்டத்திற்கு புறம்பான்மையான என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

சட்டத்திற்கு உட்பட்ட செலவுகள்

சட்டத்திற்கு உட்பட்ட செலவுகளில் தேர்தல் சிறப்பு அலுவலகம், முன் அனுமதி பெறப்பட்ட பொதுக்கூட்டங்கள், கட்சி ஊர்வலங்கள், போஸ்டர்கள் அடிப்பது, நாளிதழ்களில் விளம்பரங்கள் செய்வது, டிஜிட்டலில் விளம்பரங்கள் செய்வது, பிரச்சார செலவுகள் மற்றும் தொண்டர்களுக்கான உணவுச் செலவுகள் அடங்கும். இவை அனைத்தும் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள விலை பட்டியலின் அடிப்படையிலேயே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

சட்டத்திற்கு புறம்பான செலவுகள்

தேர்தலுக்காக வேட்பாளர்களுக்கு பணம் அல்லது பரிசு பொருள்கள் கொடுப்பது, மதுபானங்களை விநியோகம் செய்வது போன்றவை சட்டத்திற்கு புறமான தேர்தல் செலவாக கருதப்படும்.

எந்த ஒரு வேட்பாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படும்.

பறக்கும் படை கண்காணிப்பு

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரங்களை கண்காணிக்க மற்றும் முழுமையாக வீடியோ பதிவு செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும் படைகள் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

தேர்தல் தொடர்பான ஏதேனும் புகார்கள் வந்தால் அதனை விசாரிக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

=============