வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்
AI-based app to identify duplicate voters in SIR , Bengal Chief Electoral Officer : பிகாரை தொடர்ந்து தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோன்று, அசாமிலும் நேற்று முதல் இந்தப் பணிகள் தொடங்கி இருக்கின்றன.
போலிகளால் பெரும் குழப்பம்
வாக்காளர் பட்டியலில் போலி பதிவுகள் மற்றும் இரட்டை பதிவுகள் இடம் பெற்றிருப்பது, ஜனநாய கத்தின் அடித்தளத்தையே அசைப்பதோடு, வாக்குப்பதிவின் போது பல குழப்பங்களையும், பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது. வாக்காளர் பட்டியலில் போலி பெயர்கள் அதிகமாக சேரும்போது, உண்மையான வாக்காளரின் வாக்கு மதிப்பும் குறைகிறது.
கால இடைவெளியில் திருத்தப் பணிகள்
இது, போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை பாதிக்கிறது. எனவே, முறைகேடுகளை தடுக்கவும், குறைபாடுகளை களையவும் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது.
பிகாரில் 60 லட்சம் பேர் நீக்கம்
அண்மையில் சட்டசபை தேர்தலை சந்தித்த பிகாரில், தேர்தலுக்கு முன்பு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதில், 60 லட்சம் போலி மற்றும் இறந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
2026ல் நான்கு மாநில தேர்தல்
தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே, இந்த மாநிலங்களில் தீவிர சிறப்பு திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்கு வங்கத்தில் AI தொழில்நுட்பம்
மேற்கு வங்கத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தேர்தல் கமிஷன் பயன்படுத்த உள்ளது. இதன் மூலம், ஒரே நபர் வாக்காளராகபல இடங்களில் பதிவு செய்திருந்தால் கண்டுபிடித்து விட முடியும்.
இரட்டை பதிவு நீக்கம்
ஒரே புகைப்படத்தை பயன்படுத்தி பல போலி பதிவுகள் இருந்தாலோ, அவற்றை ஏ.ஐ., உதவியுடன் முகத்தை பொருத்தி பார்க்கும் தொழில்நுட்பம் அடையாளம் காண உதவும். இதன்மூலம் தவறுகள் சரி செய்யப்படும்.
போலிகள் அடையாளம் காணப்படுவர்
இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது, “ புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி, போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு அதிக புகார்கள் வந்துள்ளன. அதே போல் இரண்டு இடங்களில் வாக்கு வைத்திருப்போர் அதிகரித்துள்ளதாக தெரிய வருகிறது.
தவறு இருந்தால் நீக்கப்படும்
எனவே, தொழில்நுட்ப உதவியாக ஏ.ஐ., அம்சத்துடன் கூடிய முகத்தை பொருத்தி பார்க்கும் நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம். ஆனாலும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உறுதி செய்த பின்னரே, ஏ.ஐ., கண்டறிந்த பதிவுகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்“ இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
===