கேரள சட்டமன்ற துணை எதிர்க்கட்சி தலைவர்:
2026 கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் எல்டிஎப் (LDF) தோல்வியடைந்து எதிர்க்கட்சியாக மாறிய நிலையில், சட்டப்பேரவையின் துணை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கோரியுள்ளது. கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இருப்பதால் அந்தப் பதவி தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று CPI வலியுறுத்தி வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவராக உள்ள பினராயி விஜயன், துணை எதிர்க்கட்சித் தலைவர் பதவி CPM-க்கே சொந்தமானது என்றும், அந்தப் பதவிக்காக CPM உறுப்பினரின் பெயரையே சபாநாயகரிடம் பரிந்துரைப்பேன் என்றும் வெளிப்படையாக தெரிவித்தார்.
இதுவே சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது.
கடும் எதிர்ப்பு தெரிவித்த CPI :
பினராயி விஜயனின் கருத்துக்கு CPI மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூட்டணி அரசியலின் மரபுகளுக்கு எதிராக ஒருதலைப்பட்சமாக முடிவு எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த விவகாரம் கூட்டணிக்குள் ஆலோசித்து தீர்க்கப்பட வேண்டும் என்றும் CPI வலியுறுத்தியது.
வார்த்தைப் போரில் இறங்கிய இரு கட்சிகள் :
துணை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைச் சுற்றிய விவகாரம் CPI மற்றும் CPM இடையே வெளிப்படையான வார்த்தைப் போராக மாறியுள்ளது.
இரு கட்சிகளின் இளைஞர் அமைப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ நாளிதழ்களிலும் பரஸ்பர விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
இதனால் எல்டிஎப் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
சமரச முயற்சியில் எல்டிஎப் :
இந்த விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக எல்டிஎப் ஒருங்கிணைப்பாளர் டி.பி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கூட்டணியின் ஒற்றுமையை பாதுகாக்க இரு தரப்பினருடனும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
=================