பெண்களுக்கான சீர்மிகு திட்டம்
Free Bus for Womens, States in India : பெண்களின் பொருளாதார சிரமத்தை போக்கவும், பாதுகாப்பு, பொருளாதார சுதந்திரம், வேலைவாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் அவர்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாக, இந்தியாவிலேயே முதன்முறையாக டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டம்.
டெல்லி பிங்க் டிக்கெட்
2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் மூலம், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெண்கள் மற்றும் திருநங்கைகள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்துக் கொள்ளலாம். எத்தனை முறைவேண்டுமானாலும் பயணம் எந்தவொரு வரம்பும் இல்லை.
சஹேலி பிங்க் ஸ்மார்ட் கார்டு
பிங்க் டிக்கெட்டுக்கு பதிலாக விரைவில் சஹேலி பிங்க் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவுள்ளது. ஜூலை மாதம் அமலுக்கு வருகிறது.
பெண்கள் பேருந்துகளில் ஏறும் போது இந்த கார்டை ஸ்கேன் செய்தாலே போதும், அனைத்து விவரங்களும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும்.
இக்கார்டை ரீசார்ஜ் செய்து டெல்லி மெட்ரோ மற்றும் பிராந்திய விரைவு போக்குவரத்து (RRTS) ரயில்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழகம் விடியல் பயணம் திட்டம்
தமிழக அரசு 2021 ஆம் ஆண்டு 'விடியல் பயணம்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.
சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
எந்தவொரு அடையாள அட்டையும் தேவையில்லை, கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கப்படும்.
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், அவர்கள் அளித்த வாக்குறுதியின்படி, அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்துக் கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் விரைவில் மாற்றியமைக்கப்படுகிறது.
பஞ்சாப் இலவச பேருந்து பயணம்
பஞ்சாப் மாநிலத்தில் 2021ம் ஆண்டு பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணத்தை அரசு அறிமுகப்படுத்தியது. பஞ்சாப் சாலைப் போக்குவரத்து கழகம் (PUNBUS, PRTC) மற்றும் நகரப் பேருந்துகளில் அனைத்து பெண்களும் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதாரமாக ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
கர்நாடகா சக்தி திட்டம்
கர்நாடகாவில் 2023ம் ஆண்டு சக்தி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நாடு முழுவதும் பேசு பொருளானது. காரணம், பெண்கள், மாணவிகள் மற்றும் திருநங்கைகள் கர்நாடகா மாநிலம் முழுவதும் சாதாரண மற்றும் எக்ஸ்பிரஸ் அரசுப் பேருந்துகளில் எந்தவொரு கட்டணுமும் இல்லாமல் பயணம் செய்யலாம்.
தவறான பயன்பாட்டைத் தடுக்கவும், பயணத்தை முறைப்படுத்தவும் சேவா சிந்து (Seva Sindhu) போர்டல் மூலமாக சக்தி ஸ்மார்ட் கார்டுகள் பெண்களுக்கு வழங்கப்படுகின்றன.
தெலங்கானா மகாலட்சுமி திட்டம்
தெலங்கானா அரசு 2023ம் ஆண்டு மகாலட்சுமி திட்டத்தை கொண்டு வந்தது. பெண்கள் மற்றும் திருநங்கை பயணிகள் தெலுங்கானா முழுவதும் தெலுங்கானா மாநில அரசுப் பேருந்துகளில் (TGSRTC) இலவசமாகப் பயணிக்கலாம். நடத்துநரிடம் ஆதார் அட்டையை காண்பித்து டிக்கெட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் இலவச பயணத் திட்டம்
ஜம்மு & காஷ்மீர் அரசு 2025ம் ஆண்டு பெண்களுக்காக பிரத்யேக இலவச நகரப் பேருந்து திட்டத்தை தொடங்கியது. இதன் மூலமாக, ஸ்மார்ட் சிட்டி இ-பஸ்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் சாலை போக்குவரத்து கழகம் இயக்கும் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.
ஆந்திரா ஸ்திரீ சக்தி திட்டம்
ஆந்திர அரசு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 'ஸ்திரீ சக்தி' இலவசப் பேருந்துத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலமாக ஆந்திராவில் வசிக்கும் பெண்கள், சிறுமியர் மற்றும் திருநங்கைகள் அனைவரும் பேருந்துகளில் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம்.
பெண்களை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண திட்டம் திவ்யாங் சக்தி என்ற பெயரில் 2026 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அவர்களுடன் வருபவர்களுக்கு பாதி கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது.
மேற்கு வங்கம் இலவசப் பேருந்து திட்டம்
மேற்கு வங்கத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், ஜூன் 01ம் தேதி முதல் பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணத் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் அன்னப்பூர்ணா மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு தகுதியான பெண்கள் மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் எ
கேரளா பெண்கள் இலவசப் பயண திட்டம்
கேரளாவிலும் புதிய அரசு பதவியேற்று இருக்கும் நிலையில், ஜூன் 15ம் தேதி முதல் கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளில் அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
===========