ஈரான் போர்
ஈரான் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக வணிக சிலிண்டர் விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
வீட்டு எரிவாயு சிலிண்டர் சப்ளைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதால், ஹோட்டல்கள், உணவகங்கள், சாலையோர உணவு கடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு
பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. புதுச்சேரியிலும் வணிக எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு இருக்கிறது.
இதனால், புதுச்சேரியில் பல சிறிய உணவகங்கள் மூடப்பட்ட நிலையில், திறந்திருக்கும் கடைகளிலும் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
டிபன் விலை அதிகரிப்பு
சாதாரண ஓட்டல்களில் 30 ரூபாய்க்கு விற்ற பூரி, பொங்கல் ஆகியவை 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல இட்லி, வடை ரூ.6ல் இருந்து ரூ.10க்கும், பரோட்டா ரூ.15ல் இருந்து ரூ.20, ரூ.25 வரையிலும், 20 ரூபாய் சப்பாத்தி 30 ரூபாய், பிரியாணி சராசரியாக ரூ.100, சாப்பாடு ரூ.150 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
உணவு வகைகளுக்கு கட்டுப்பாடு
பெரிய ஓட்டல்களில் குறிப்பிட்ட உணவுகள் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கின்றனர். முதலிலேயே முழுமையாக ஆர்டர் கொடுக்க வேண்டும். கியாஸ் அடிக்கடி உபயோகப்படுத்த முடியாது என்பதால் ஒரே கட்டமாக சமைத்து எடுத்து வருவோம் என தெரிவிக்கின்றனர்.
டீ, காபி விலையும் அதிகரிப்பு
உணவுப் பொருட்களைத் தொடர்ந்து, டீ, காபி விலையையும் உயர்த்தப் போவதாக டீக்கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
ரூ.12, ரூ.15 என விற்கப்பட்ட டீ 20 ரூபாயாகவும், 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட காபி 30 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு செவ்வாய்க்கிழமை ( நாளை முதல் ) அமலுக்கு வருகிறது.
சாமான்ய மக்கள் அவதி
காபி, டீ, டிபன் விலை உயர்வு, சாமான்ய மக்களை பாதிக்கும் என்றும், கூடுதலாக செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் தெரிகிறது.
===