For the first time in India, an H5N1 vaccine is being introduced to prevent bird flu source:thamizhalai,ai generated
இந்தியா

”பறவைக் காய்ச்சலை தடுக்க தடுப்பூசி” : இந்தியாவில் முதன்முறையாக அறிமுகம் : H5N1 தடுப்பூசி உள்நாட்டிலேயே தயாரிப்பு..!

இந்தியாவில் முதல்முறையாக பறவைக் காய்ச்சலை தடுக்க H5N1 தடுப்பூசி, பயன்பாட்டிற்கு வருகிறது.

Kannan

பறவைக் காய்ச்சல், கோழிகள் உயிரிழப்பு

பருவ காலத்திற்கு ஏற்ப வைரஸ் பாதிப்புகள் பரவுவது வழக்கமானது தான். இருப்பினும் தற்போது இந்தியா முழுக்க பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், கோழிகள் அதிகளவில் உயிரிழந்து வருகின்றன.

இதனால் கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் தடுப்பூசி

பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட H5N1 தடுப்பூசியை, 20ம் தேதி மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பறவைக் காய்ச்சல் தடுப்பூசியை அறிமுகம் செய்கிறார். ​

பறவைக் காய்ச்சலுக்கு எதிராக செயல்படும்

போபாலில் இருக்கும் தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் தடுப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தத் தடுப்பு மருந்து, H5N1 வைரஸுக்கு எதிராக செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் தீவிரமடைந்து வரும் சூழலில், உள்நாட்டு தடுப்பு மருந்து அறிமுகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

கோழிகளுக்கு தொற்று ஏற்படாது

இது உயிரற்ற அல்லது பெருக்கமடையாத வைரஸ்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘செயலிழக்கப்பட்ட தடுப்பூசி’ என்பதால், இதன் மூலம் கோழிகளுக்கு வேறு எந்தத் தொற்றும் ஏற்படாது.

வைரஸ் எப்படி செயல்படும்?

இந்தியாவில் கோழிகளைத் தாக்கி உயிரிழக்கச் செய்யும் பறவைக் காய்ச்சல் (Highly Pathogenic Avian Influenza) பாதிப்புகளுக்கு முக்கியக் காரணமாக இருக்கும் ‘Clade 2.3.2.1a’ என்ற H5N1 வைரஸுக்கு எதிராக செயல்படும் வகையில் தடுப்பூசி பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் இதுவரை மருந்து இல்லை

சர்வதேச மற்றும் இந்திய அளவில் இதற்கு முன்பு வரை ‘Clade 2.3.2.1a’ வைரஸ் வகைக்கு எதிரான தடுப்பு மருந்து எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

H5N1 தடுப்பு சிறப்பம்சங்கள் :

* கோழிகளுக்கு ஒரே ஒரு முறை H5N1 டோஸ் தடுப்பு மருந்தை செலுத்தினால், அது அடுத்த 6 மாதங்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனை அளிக்கும்.

* தடுப்பூசி முட்டையிடும் மற்றும் இனப்பெருக்க கோழிகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

* தடுப்பூசி போடப்பட்ட கோழிகள் மற்றும் இயற்கையாக நோய்த்தொற்று ஏற்பட்ட கோழிகளை ரத்தப் பரிசோதனை மூலம் எளிதில் வேறுபடுத்த முடியும்

* 2006-ம் ஆண்டு ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் பரவலால், இந்தியாவிற்கு ரூ.2,200 கோடி முதல் ரூ.3,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டது.

தடுப்பூசி அறிமுகமாவதால் இதுபோன்ற ஒரு பொருளாதார இழப்பு ஏற்படாது.

* இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘Clade 2.3.2.1a’ வகை வைரஸ், கடந்த சில நாட்களில் கோழிகள் மட்டுமின்றி பாலூட்டிகள் மற்றும் 3 மனிதர்களிடமும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகவே கோழிகளிடம் பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவலைத் தடுப்பது, மனித உயிர்களைப் பாதுகாப்பிற்கு நன்மை அளிக்கும்.

================