Atal Bihari Vajpayee Birth Village : முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பொது சேவையில் உறுதியோடு ஈடுபட்டவர். 1996-ஆம் ஆண்டு 13 நாட்கள் அவர் பிரதமராக இருந்தார். அக்டோபர் 13, 1999 அன்று இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் அவர் புதிய அரசுக்கு தலைமையேற்றார்.
நேரு காலத்திற்கு பிறகு அடுத்தடுத்து இரண்டு முறை தொடர்ந்து பதவி ஏற்ற முதல் பிரதமர் இவர்தான். ஒரு மூத்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வாஜ்பாயின் அரசியல் காலம் 40 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது. ஒன்பது முறை மக்களவைக்கும் இரண்டு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வாஜ்பாய்.
விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்ததில் வாஜ்பாயிக்கு பெரிய பங்கு உண்டு. கவிதை உள்ளம் கொண்ட வாஜ்பாய் பிரதமராக, வெளியுறவுத்துறை அமைச்சராக, பல நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் தலைவராகவும் எதிர்க் கட்சித் தலைவராகவும் பணியாற்றிய சிறப்புக்குரியவர்.
மேலும் படிக்க : தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி:ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்பு
வாஜ்பாய் மூதாதையர்கள் வாழ்ந்த பூர்வீக கிராமம் ஆக்ராவில் உள்ள படேஷ்வர்(Badeshwar Village). இந்த கிராமத்தில் 101 சிவன் கோயில்கள் இருப்பது சிறப்பம்சமாக கருதப்படுகிறது. வாஜ்பாயின் 101வது பிறந்தநாளில்(Atal Bihari Vajpayee Birthday) 101 சிவன் கோயில்கள் இருக்கும் படேஷ்வர் கிராமத்தை ஆன்மீக மற்றும் பாரம்பரிய சுற்றுலா தலமாக மாற்ற உத்தரப்பிரதேச அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆக்ராவின் பிரோசாபாத் சாலையில் அமைந்திருக்கும் படேஷ்வர் கிராமத்திற்கு பிரம்மாண்டமான நுழைவு வாயிலை ஏற்படுத்தப்பட உள்ளது.
மேலும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பல்வேறு வசதிகளையும் ஏற்படுத்த ரூ.27 கோடியை ஒதுக்கீடு செய்து உத்தரப்பிரதேச அரசு(UP Govt) உத்தரவிட்டுள்ளது. கிராமத்தின் உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளை மேம்படுத்த தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தின் எல்லையாக இருக்கும் சம்பல் பள்ளத்தாக்கிற்கு அருகில் படேஷ்வர் கிராமம் அமையப்பெற்றுள்ளது.
பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்திருக்கும் படேஷ்வர் கிராமம் சுற்றுலா(Badeshwar Tourist Place) தலமாக்கப்படுவதால், ஆக்ராவில் தாஜ்மகாலை காண வரும் சுற்றுலா பயணிகள், படேஷ்வருக்கும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.