four previous assembly elections held in Bihar, Nitish Kumar remains an unshakeable leader Bihar CM Google
இந்தியா

பிகார் வரலாறு : 20 ஆண்டுகளாக CM, அசைக்க முடியாத நிதிஷ்குமார்

Bihar Assembly Election 2025 : பிகாரில் இதற்கு முன்பு நடைபெற்ற 4 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணியை மாற்றினாலும், அசைக்க முடியாத தலைவராக இருக்கிறார் நிதிஷ்குமார்.

Kannan

2005ல் ஜனாதிபதி ஆட்சி

Bihar Assembly Election 2025 : வித்தியாசமான அரசியல் களத்தை கொண்டது பிகார் மாநிலம், லாலு பிரசாத்தின் மோசமான ஆட்சியில் இருந்து 2005ம் ஆண்டு அந்த மாநிலம் விடுபட்டது. அந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால், ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

2005 முதல்வரான நிதிஷ்குமார்

பின்னர் அக்டோபர்- நவம்பரில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜகவுடன் கூட்டணி வைத்த நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி 139 இடங்களில் போட்டியிட்டு 88 இடங்களில் வென்றது. இதன் மூலம் முதல்வரானார் நிதிஷ்குமார்.

மாறிமாறி கூட்டணி - நிதிஷ்குமார்

2010 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் நீடித்த ஜேடியூ 141 இடங்களில் போட்டியிட்டு 115 தொகுதிகளில் வென்றது. 2015ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ், லாலுவுடன் கைகோர்த்தார்.

இந்தக் கூட்டணியில் காங்கிரசும் அங்கம் வகித்தது. 101 தொகுதிகளில் களம்கண்டு 71 தொகுதிகளை தன்வசப்படுத்தி, முதல்வரானார் நிதிஷ்குமார்.

2020ம் ஆண்டு தேர்தலின் போது மீண்டும் என்டிஏ கூட்டணியோடு சந்தித்த நிதிஷ், 115 இடங்களில் போட்டியிட்டு 43 இடங்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் மீண்டும் அவர் முதல்வரானார்.

பிகார் - பாஜகவின் வளர்ச்சி

4 சட்டமன்ற தேர்தகளில் 3ல் ஜேடியூவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, 2005ல் 102 தொகுதிகளில் 55 இடங்களை வென்றது.

2010ஆம் ஆண்டு 102 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 91 இடங்களை வசப்படுத்தியது.

2015ஆம் ஆண்டு தேர்தலில் 157 தொகுதிகளில் களம் கண்டு 53 இடங்களை கைப்பற்றியது.

2020 தேர்தலில் 110 இடங்களில் பாஜக போட்டியிட்ட நிலையில் கூட்டணி கட்சியான ஜேடியூ-வை விட 31 இடங்கள் அதிகமாக, 74 இடங்களை கைப்பற்றியது பாஜக. ஆயினும் நிதிஷ்குமாரை முதல்வர் நாற்காலியில் அமர்த்தி அழகு பார்த்தது பாஜக.

லாலுவின் RJD கட்சி

காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 2005ம் ஆண்டு தேர்தலில் களமிறங்கிய ராஷ்டிரிய ஜனதா தளம் 175 தொகுதிகளில் போட்டியிட்டு 54 இடங்களில் வென்றது.

2010ம் ஆண்டு லோக் ஜனசக்தி கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்த ஆர்ஜேடி 168 இடங்களில் போட்டியிட்டு 22 இடங்களை வென்றது.

2015ஆம் ஆண்டு மகாகத்பந்தன் கூட்டணி பலமாக இருந்த நிலையில் அதில் ஆர்ஜேடி 101 இடங்களில் போட்டியிட்டு 80 இடங்களை வசப்படுத்தியது. முந்தைய தேர்தலை விட 58 இடங்களை கூடுதலாக ஆர்ஜேடி வென்றது.

மீண்டும் அதே கூட்டணியில் 2020 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆர்ஜேடி 144 இடங்களில் களம் கண்டு 75 இடங்களை கைப்பற்றியது.

காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சி

2005ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 51 இடங்களில் போட்டியிட்டு வெறும் 9 இடங்களில் வென்றது.

2010ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட காங்கிரசுக்கு பலத்த அடி விழுந்தது. அந்த தேர்தலில் 243 இடங்களில் போட்டியிட்டு வெறும் 4 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் வெற்றிப்பெற முடிந்தது.

2015ஆம் ஆண்டு மகாகத்பந்தன் கூட்டணியில் காங்கிரசுக்கு 41 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் 27 இடங்களை கைப்பற்றியது.

2020ஆம் ஆண்டு தேர்தலில் 70 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களை காங்கிரஸ் வென்றது.

அசைக்க முடியாத நிதிஷ்குமார்

20 ஆண்டுகளாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்து இருக்கும் நிதிஷ்குமார் மற்றும் அவரது JDU கட்சியின் இந்த சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்று. மாறி மாறி கூட்டணி, தொடர்ந்து ஒரே முதல்வர் என்ற அதிருப்தி மக்களிடம் இருக்கிறது. அதை பாஜக கச்சிதமாக அறுவடை செய்திருக்கிறது என்றே கூறலாம்.

தனிப்பெரும் கட்சியாக பாஜக!

இதை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. இந்தத் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சியாக பாஜக இருக்கும். தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றாலும், ஆட்சி, அதிகாரத்தில் முக்கிய பங்கு இருக்கும். நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக்கப்பட்டாலும், அவர் பாஜக கூறுவதை கேட்டுத்தான் செயல்பட வேண்டி இருக்கும்.

=======================