நீதிபதி சூர்யகாந்தின் கருத்தில் தொடங்கி 'திமாகி நக்சல் கட்சி' வரை: மத்திய அரசுக்கு எதிரான சமூக ஊடக இயக்கங்களின் பின்னணி!
கரப்பான் ஜனதா கட்சியின் பிறப்பும் பின்னணியும்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உச்சநீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் வழக்கு ஒன்றின் விசாரணையின் போது, வேலையில்லாத இளைஞர்களைக் கரப்பான்பூச்சிகள் எனக் குறிப்பிட்டதாகக் கூறி இந்திய அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
'கரப்பான் ஜனதா கட்சி'
இந்த அவமதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அபிஜித் திப்கே என்பவர் சமூக வலைத்தளங்களில் 'கரப்பான் ஜனதா கட்சி' என்ற பெயரில் ஒரு கணக்கைத் தொடங்கினார். இந்தக் கணக்கு குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான மக்களின் பேராதரவைப் பெற்று மிக விரைவாகப் பிரபலமடைந்தது.
டெல்லி போராட்டம் மற்றும் கல்வி அமைச்சரின் ராஜினாமா
சமூக வலைத்தள ஆதரவைத் தொடர்ந்து அபிஜித் திப்கே அதே பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கி செயல்படத் தொடங்கினார்.
நீட் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்தும், அதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்தர் பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பிரம்மாண்ட போராட்டத்தை நடத்தினார்.
மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற இந்தத் தீவிரப் போராட்டத்துக்குப் பணிந்த மத்திய அரசு, இறுதியாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்தர் பிரதானின் ராஜிநாமாவைப் பெற்றது.
எத்தனால் கலப்புக்கு எதிராக உருவான E20 ஜனதா கட்சி
கரப்பான் ஜனதா கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவைக் கண்டித்து 'E20 ஜனதா கட்சி' என்ற புதிய அமைப்பு சமூக வலைத்தளங்களில் உருவானது.
அரசாங்கத்தின் இந்த எத்தனால் கலப்பு நடவடிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்த இந்த அமைப்பும் குறுகிய காலத்திலேயே லட்சக்கணக்கானோரின் ஆதரவைப் பெற்று வலுவான ஒரு இயக்கமாக உருவெடுத்தது.
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையும் 'திமாகி நக்சல்' சர்ச்சையும்
இதனிடையே, நாட்டின் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆயுதமேந்திய நக்சலிசம் காடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், 'திமாகி நக்சல்கள்' அதாவது அறிவுசார் நக்சல்கள் தற்போது அரசு நிர்வாகத்தின் முக்கிய இடங்களில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர் என்று பேசினார்.
பிரதமரின் இந்த உரை அரசியல் தளத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.
திமாகி நக்சல் கட்சி கணக்கு முடக்கம்
பிரதமர் மோடியின் இந்த பேச்சைக் கண்டித்து இன்ஸ்டாகிராமில் 'திமாகி நக்சல் கட்சி' (Dimagi Naxal Party) என்ற புதிய கணக்கு உருவாக்கப்பட்டு, உடனடி வரவேற்பைப் பெற்று லட்சக்கணக்கானோரால் பின்தொடரப்பட்டது.
எனினும், பல்வேறு சைபர் தாக்குதல்களுக்கு இலக்கானதாகத் தனது இன்ஸ்டாகிராம் 'ஸ்டோரி'களில் பதிவிட்டிருந்த அந்தப் பக்கம், தற்போது திடீரென முடக்கப்பட்டுள்ளது.
=====