Gandhian Sonam Wangchuk is continuing his hunger strike in Delhi for the 18th day google
இந்தியா

”18வது நாளாக உண்ணாவிரதம்” 9 கிலோ எடையிழப்பு : உறுதியுடன் ”சோனம் வாங்சுக்”, பெருகும் ஆதரவு : மத்திய அரசு மவுனம்...!

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி, காந்தியவாதி சோனம் வாங்சுக் டெல்லியில் 18வது நாளாக உண்ணாவிர போராட்டத்தை தொடர்கிறார்.

Kannan

யார் இந்த சோனம் வாங்சுக்?

1966ல் பிறந்த சோனம் வாங்சுக் ஒரு பொறியாளர். விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் வித்தகர். கல்வி சீர்திருத்தவாதி. சூழலியல் செயற்பாட்டாளர்.

‘3 இடியட்ஸ்’ கதாபாத்திரத்தின் இன்ஸ்பிரேஷன்

2009-ம் ஆண்டு ஆமிர் கான் நடித்த ‘3 இடியட்ஸ்’ படத்தில் அவரது கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தவர் தான் இந்த சோனம் வாங்சுக்.

சோனம் வாங்சுக்காக விஜய்

தமிழில் அது ‘நண்பன்’ என்ற படமாக இயக்குனர் ஷங்கரால் எடுக்கப்பட்ட போது, நமது இன்றைய முதல்வர் விஜய் சோனம் வாங்சுக்கை பிரதிபலிக்கும் பாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கல்வி சீர்திருத்தம் - போராட்டங்கள்

இது மட்டுமே அவருக்கான புகழ் அடையாளமில்லை. சோனம் வாங்சுக் லடாக்கில் கல்வி முறையில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த ‘மாணவர்களின் கல்வி மற்றும் கலாசார இயக்கம்’ (Students’ Educational and Cultural Movement - SECMOL) என்ற அமைப்பை தொடங்கினார்.

இந்த முறை லடாக்கின் கலாசார, சுற்றுச்சூழல் தன்மைக்கு ஏற்றதாக இருக்கும் என்று அவர் குரல் கொடுத்து வந்தார். ஏட்டுக் கல்வியோடு நிறுத்தாமல் மாணவர்களுக்கு செயல்முறை கல்வி வழங்க வேண்டும் என்பதே அவரின் இலக்கு.

அறிவியல் கண்டுபிடிப்பாளர் சோனம் வாங்சுக்

1993 முதல் 2005 வரை வாங்சுக், ‘லடாக்ஸ் மெக்லாங்’ என்ற அச்சு இதழின் ஆசிரியராக இருந்தார். இவரது அறிவியல் கண்டுபிடிப்புகளில் முக்கியமானது, லடாக் மக்களுக்காக மைனஸ் 15 டிகிரி குளிரையும் தாக்குப்பிடிக்கும் வகையிலான களிமண் வீடுகளை உருவாக்கியது.

சீனாவை கடுமையாக எதிர்த்தவர்

2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் இந்தியா மோதலில் ஈடுபட்டபோது, ‘எல்லையில் வீரர்கள் சண்டை போடட்டும். நாம் சீனப் பொருட்களை வாங்காமல் ‘வாலட் பவர்’ (Wallet Power) காட்டுவோம்’ என்று முழங்கியவர்.

21 நாட்கள் உண்ணாவிரதம்

2024 மார்ச் மாதம் வாங்சுக், லடாக் மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்தனர்.

அதே ஆண்டு, லே முதல் டெல்லி வரை டெல்லி சலோ பாதயாத்திரை என்ற பெயரில் மாநில அந்தஸ்துக்கான பாதயாத்திரையை மேற்கொண்டார்.

லடாக் - மாநில அந்தஸ்து போராட்டம்

லடாக் மாநில அந்தஸ்துக்கான அவரது குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. யூனியன் பிரதேசமாக இருப்பதால், அதற்கு போதிய அதிகாரங்கள் இல்லை.

லடாக் கலாசார, சூழலியல் அடையாளத்தை பாதுகாக்க வலுவான சட்டப்பேரவை வேண்டும். அதில், உள்ளூர்வாசிகளின் குரல்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்று தொடர்ந்து முழங்கி வருகிறார் வாங்சுக்.

2025-ல் அவர் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினார் வாங்சுக்.

டெல்லியில் உண்ணாவிரத போராட்டம்

இப்போது டெல்லி ஜந்தர் மந்தரில் சோனம் வாங்சுக் மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டம் 18வது நாளாக நீடிக்கிறது.

அவரது போராட்டத்திற்கு பின்னால் இருப்பது ஒற்றைக் கோரிக்கை. ‘மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும்’, என்பது தான் அது.

உள்ளே பலமாக இருக்கிறேன்

தொடர் உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல் எடை 9 கிலோ குறைந்து இருக்கிறது. “நான் வெளியே பலவீனமாக இருந்தாலும், உள்ளே பலமாக இருக்கிறேன்” என்று கூறியபடியே போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார் வாங்சுக்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே இந்தியாவில் நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் நடைபெறும் வினாத்தாள் கசிவை மையப்படுத்தி கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தார்.

பெருகும் ஆதரவு

அவருக்கு ஆதரவாகவே கடந்த ஜூன் 28ம் தேதி சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். டெல்லியில் அவர் உண்ணாவிரதம் இருக்கும் பகுதிக்கு இளைஞர்களும், பொது மக்களும் வந்தவண்ணம் உள்ளனர்.

வாங்சுக் உடன் அபிஜித் தீப்கே

பெரும்பாலான நேரம் சோனமுடன் மேடையில் அமர்ந்திருக்கும் அபிஜித், “நாங்கள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி சொல்கிறோம். ஆனால் அவர் பிடிவாதமாக இருக்கிறார். இதுவரை அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்கும் அவரது ஆதரவாளர்களும் உயிரிழக்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றம் நோக்கி பேரணி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறுகிறது. அன்றைய தினம் நாடாளுமன்றம் நோக்கிய பேரணிக்கு சிஜேபி ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.

===============