வாக்குப்பதிவில் சாதனை
Assam & Puducherry record highest-ever voter turnout in Assembly polls, Keralam also marks over 79% poll participation : கேரளம், புதுச்சேரி, அசாமில் நேற்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மூன்று மாநிலங்களிலிம் வாக்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக அசாம், புதுச்சேரியில் வாக்குப்பதிவு வரலாற்று சாதனை படைத்துள்ளது.
கேரளத்தில் வாக்குப்பதிவு
140 தொகுதிகள் கொண்ட கேரளத்தில் மொத்தம் 2.71 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 883 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அதற்கு முன்பே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றனர்.
தலைவர்கள் வாக்களித்தனர்
முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்த பிறகு, 2021 தேர்தலை விட இடது சாரி கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கூட்டணி முதல்வர் வேட்பாளருமான வி.டி. சதீசன் பரவூர் தொகுதியில் வாக்களித்தார்.
கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் தன்னுடைய மனைவியுடன் திருவனந்தபுரத்தில் ஓட்டு போட்டார்.
பாஜ வேட்பாளரும், மாநில தலைவருமான ராஜீவ் சந்திரசேகர் ஜவகர் நகரில் உள்ள பள்ளியிலும், சசிதரூர், எம்பி திருவனந்தபுரம் வழுதக்காடு காட்டன்ஹில் அரசுப் பள்ளியிலும் வாக்குப்பதிவு செய்தனர்.
ஆர்வமுடன் வாக்களித்த பொதுமக்கள்
காலையில் இதமான சூழல் நிலவிய சூழலில், மதிய வரை அடித்த கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டனர்.
திருவனந்தபுரம் உள்பட சில பகுதிகளில் மாலையில் திடீர் மழையும் பெய்தது. ஆனாலும் வாக்காளர்கள் திரண்டு வந்து ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.
கேரளத்தில் 79% வாக்குகள் பதிவு
கேரளத்தில் 79 சதவீதம் வாக்குகள் பதிவாயின. கடந்த தேர்தலில் 75.76 சதவீத வாக்குகள் பதிவானது.
கேரளாவில் எஸ்ஐஆருக்குப் பின் நடந்த இந்த தேர்தலில் 4 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குப்பதிவு நடந்துள்ளது.
அசாம் சட்டமன்ற தேர்தல்
வடகிழக்கு மாநிலமான அசாமில் 126 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடந்தது.
அங்கு, 3வது முறையாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தலைமையிலான பாஜவின் என்டிஏ கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களமிறங்கும் நிலையில், 2016ல் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ் எதிர்த்து நிற்கிறது.
மொத்தம் 722 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 35 மாவட்டங்ளில் 31,490 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வம்
காலையில் கவுகாத்தி உள்பட பல பகுதிகளில் லேசான மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையிலும் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
வாக்களித்த தலைவர்கள்
ஜலுக்பாரி தொகுதியில் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அவரது மனைவி ரிங்கி புயான் சர்மா மற்றும் 2 பிள்ளைகளுடன் வந்து வாக்களித்தனர்.
மாநில காங்கிரஸ் தலைவரும், மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவருமான கவுரவ் கோகாய் தனது தாயார் டோலி கோகாயுடன் ஜோர்ஹட் தொகுதியில் வாக்களித்தார்.
85.21% வாக்குகள் பதிவு
85.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு 95 சதவீதமாக இருந்தது.
மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள், மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.
அதிக அளவில் வாக்குகள் பதிவாகி இருப்பதால், கருத்து கணிப்புகளை மீறி, தேர்தல் முடிவுகள் இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
==================