அமைச்சர் அமித்ஷா பேச்சு
Home Minister Amit Shah on Bihar Election 2025 Results : மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, குஜராத் மாநிலம் ஹரிபரில் நடந்த எல்லை பாதுகாப்பு படையின் 61-வது எழுச்சி தின விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை மூலம் இந்தியாவின் எல்லை மற்றும் பாதுகாப்புப் படைகள் சமரசம் செய்யாது என்பதை முழு உலகிற்கும் தெளிவாகியது. ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகம், பயிற்சி முகாம்கள் மற்றும் ஏவு தளங்களை நமது ராணுவம் அழித்தது. துரதிருஷ்டவசமாக, சில அரசியல் கட்சிகள் ஊடுருவல்காரர்களை பாதுகாக்க முயற்சித்து வருகின்றன. ஊடுருவல்காரர்களை அகற்றும் பணியை பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன.
ஊடுருவல்காரர்களை அகற்றுவதே எங்கள் உறுதி மொழி
இந்த அரசியல் கட்சிகள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு ஆகியவற்றை எதிர்க்கின்றன. ஊடுருவல்காரர்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. நமது நாட்டில் இருந்து அனைத்து ஊடுருவல்காரர்களையும் நாங்கள் அகற்றுவோம் என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
இது எங்களது உறுதிமொழி ஆகும். வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்பது நாட்டையும் நமது ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான ஒரு செயல்முறை ஆகும். தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை முழுமையாக ஆதரிக்குமாறு நாட்டு மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஊடுருவல்காரர்களைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகளுக்கு பீகார் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பு ஒரு எச்சரிக்கை ஆகும்.
நாட்டை நக்சலைட் பாதிப்பில் இருந்து விடுவிப்போம்
நக்சலைட் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் எல்லை பாதுகாப்பு படையினர் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளனர். நாட்டை நக்சலைட் பாதிப்பில் இருந்து 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் விடுவிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று பேசியுள்ளார்.