Amit Shah Bihar Election Campaign Speech : பீஹார் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. நவ.,6 மற்றும் 11ம் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடக்க இருக்கும் நிலையில், இந்தத் தேர்தலில் பாஜ, ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்டிஏ கூட்டணிக்கும், காங்கிரஸ், ஆர்ஜேடி அடங்கிய மஹாகத்பந்தன் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கூட்டணி கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தர்பாங்காவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.
25 வயது மைதிலிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம்
அப்போது பேசிய அவர், நாங்கள் பாஜ வேட்பாளராக 25 வயதே ஆன மைதிலி தாகூருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். இவருக்கு எந்தவித அரசியல் பின்னணியும் கிடையாது. ஆனால், இதுபோன்ற நிகழ்வு காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் நடக்க வாய்ப்பே இல்லை. லாலு பிரசாத் தன்னுடைய மகன் தேஜஸ்வி யாதவை பீஹார் முதல்வராக்க விரும்புகிறார். சோனியா தன்னுடைய மகனை (ராகுலை) பிரதமராக்க பார்க்கிறார். ஆனால், இந்த இரு பதவிகளும் காலியாக இல்லை என்று தெரிவித்தார்.
பிஎப்ஐ உறுப்பினர்கள் சிறையில் இருந்து வெளியே வந்துவிடுவார்கள்
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சட்டப்பிரிவு 370ஐ 70 ஆண்டுகளாக பாதுகாத்து வந்துள்ளனர். பிரதமர் மோடி, 2019ம் ஆண்டு ஆக.,5ம் தேதி அதனை ரத்து செய்து உத்தரவிட்டார். ஒரு காலத்தில் பயங்கரவாதிகள் இந்திய மண்ணில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், இன்று சர்ஜிக்கல் ஸ்டிரைக், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளால் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்து வருகிறோம். பயங்கரவாத அமைப்பான பிஎப்ஐ (PFI)-ஐ தடை செய்து, அதன் உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். அவர்கள் மீண்டும் வெளியே வர முடியாதபடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், லாலு பிரசாத் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆட்சிக்கு வந்தால், மீண்டும் பிஎப்ஐ உறுப்பினர்கள் சிறையில் இருந்து வெளியே வந்துவிடுவார்கள் உள்ளிட்ட கடும் விமர்சனங்களை தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.