ICF GM Subbarao has stated that two trains of Amrit Bharat Train 3. 0 series, which will have mix of non-AC and AC coaches Soon will Launch Source : ICF
இந்தியா

அம்ரித் பாரத் ரயில் 3.0 தயாரிக்க திட்டம்: ICF GM சுப்பாராவ் தகவல்!

Amrit Bharat Train 3.0 : ஏசி அல்லாத மற்றும் ஏசி பெட்டிகளின் கலவையான அம்ரித் பாரத் 3.0-ன் இரண்டு ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று ஐசிஎஃப் பொது மேலாளர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.

Baala Murugan

ஐசிஎஃப் மேலாளர் சுப்பாராவ் :

Amrit Bharat Train 3.0 : ஐசிஎஃப் மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஐசிஎஃப் பொது மேலாளர் சுப்பாராவ் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், சென்னை ஐசிஎஃப்-ஆல் வடிவமைக்கப்பட்டு பி.இ.எம்.எல்-ல் தயாரிக்கப்பட்ட தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் சேவை அண்மையில் தொடங்கப்பட்டது. இது, பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குகிறது. 2025-ம் ஆண்டில் ஆகஸ்ட் - டிசம்பரில் 1,484 பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன. மேலும் 17 அம்ரித் பாரத் ரயில் பெட்டித் தொகுப்புகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.

அம்ரித் பாரத் 3.0 ரயில்கள் தயாரிக்க திட்டம்

நடப்பு நிதியாண்டில், ஏசி அல்லாத மற்றும் ஏசி பெட்டிகளின் கலவையான அம்ரித் பாரத் 3.0-ன் இரண்டு ரயில்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, மத்திய மற்றும் மேற்கு ரயில்வேக்கான 15 பெட்டிகள் கொண்ட 3 மின்சார ரயில்கள் மற்றும் தானியங்கி கதவுகளுடன் கூடிய இரண்டு மின்சார ரயில் பெட்டித் தொகுப்புகளைத் தயாரிக்க ஐ.சி.எஃப் திட்டமிட்டுள்ளது. 24 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மற்றும் அம்ரித் பாரத் ரயில் 3.0 போன்ற முக்கிய திட்டங்கள் சிறப்பாக முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

ஆர். என். சிங் உரை

தெற்கு ரயில்வே சார்பில், பெரம்பூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் 2025-26-ம் நிதியாண்டில் டிசம்பர் வரை மொத்த வருவாய் ரூ.9,846 கோடியை ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டு காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 7.5 சதவீதம் அதிகம். சரக்கு ரயில் போக்குவரத்து பிரிவில், 30.54 மில்லியன் டன்களைக் கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 29.34 மில்லியன் டன் கையாளப்பட்டது என்று தெரிவித்தார்.

மேலும், பயணிகள் தேவைக்காக 3,570 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. எல்எச்பி பெட்டிகளுடன் 6 புதிய ரயில்கள், 4 அம்ரித் பாரத் ரயில்கள் மற்றும் ஒரு பாசஞ்சர் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிதியாண்டில் 253 டிராக் கி.மீ. வரை மின்மயமாக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில், கோவை - ஜோலார்பேட்டை மார்க்கத்தில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்க மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை கோட்டத்தில் 3,496 கோடி ரூபாய் வருவாய்

அயனாவரத்தில் தேசியக் கொடியை ஏற்றி, சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திரசிங் ‘‘சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் தினசரி 12.39 லட்சம் பேர் பயணிக்கின்றனர். 2025 டிசம்பர் வரை ரூ.3,496 கோடி வருவாய் ஈட்டி சென்னை கோட்டம் சாதனை படைத்துள்ளது. இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 5.9 சதவீதம் அதிகமாகும். 2025-ம் ஆண்டு டிசம்பர் வரை 8.088 மில்லியன் டன்கள் சரக்குகளை ஏற்றி சாதனை படைத்துள்ளது. இது, கடந்த ஆண்டை விட10.7 சதவீதம் அதிகம்’’ என்றார்.