சபரிமலை - அலைமோதும் கூட்டம்
Chennai To Kochi Flight Ticket Price Hike for Sabarimala Ayyappa Devotees : சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சில நாட்கள் ஒரு லட்சம் பேர் வரை ஐயப்பனை தரிசித்து செல்கிறார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புதிய பக்தர்கள் கூடுதலாக வருவதாக தேவசம்போர்டு கூறியுள்ளது.
30 லட்சம் பேர் தரிசனம்
மண்டல பூஜை நாளை நடைபெறும் நிலையில், இன்று மாலை சபரிமலையில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது. 41 நாட்களில் சுமார் 30 லட்சம் பேர் ஐயப்பனை வழிபட்டுள்ளனர்.
பேருந்து, ரயில், கார்கள் மூலம் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.
விமானத்தில் செல்லும் பக்தர்கள்
பலர் விமானம் மூலம் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், சென்னையில் இருந்து கொச்சிக்கு நாள்தோறும் விமானத்தில் பயணிக்கிறார்கள்.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு சென்னை-கொச்சி-சென்னை இடையே நேரடி விமான சேவை குறைக்கப்பட்டு உள்ளதால் ஐயப்பப் பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
விமானத்தில் இருமுடி கொண்டு செல்லலாம்
கொச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து பல்வேறு வாகனங்கள் மூலம் சபரிமலைக்கு சென்று வருகின்றனர். கொச்சி விமானத்தில் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, தற்போது ‘சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானங்களில் இருமுடிக்குள் தேங்காய் எடுத்து செல்லலாம்’ என்று இந்திய விமானநிலைய ஆணையம் விதிவிலக்கு அளித்துள்ளது.இந்த சிறப்பு சலுகை, வரும் ஜனவரி 20ம் தேதிவரை அமலில் இருக்கும்.
விமானங்களில் அலைமோதும் கூட்டம்
மண்டப பூஜை நிறைவுக்கு வருவதால், விமானங்களில் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் பயணிக்கத் துவங்கியுள்ளனர். இதனால் சென்னை-கொச்சி-சென்னை இடையே இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் பயணிகளின் கூட்டம், குறிப்பாக ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு
இதனால் சென்னையில் இருந்து கொச்சி செல்லும் விமானங்களில் பயண கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக, சென்னையில் இருந்து கொச்சிக்கு ரூ.3,681 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினால் பயண கட்டணம் 3 மடங்குக்கு மேல் உயர்ந்து, ரூ.10,500ல் துவங்கி ரூ.11,500 வரை வசூலிக்கப்படுகிறது.
14 விமானங்கள் மட்டுமே இயக்கம்
கடந்தாண்டு சென்னை-கொச்சி இடையே சபரிமலை சீசன் காலங்களில் நாள்தோறும் வருகை, புறப்பாடு என மொத்தம் 18 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது, இந்தாண்டு சென்னை-கொச்சி இடையே நேரடி விமான சேவைகளாக மொத்தம் 14 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
கூடுதல் விமானங்களை இயக்க கோரிக்கை
சபரிமலை சீசன் முடியும்வரை சென்னையில் இருந்து கொச்சிக்கு கூடுதல் நேரடி விமான சேவைகளை இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் வலியுறுத்துகின்றனர்.
=====