புதுச்சேரி சட்டசபை தேர்தல்
அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
இங்கு முக்கிய கூட்டணியான ஆளும் என்டிஏ மற்றும் இண்டியா கூட்டணியில் தொகுதி பங்கீடு என்பது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது.
என்டிஏ கூட்டணி
என்டிஏ கூட்டணியில் ஆளும் என்ஆர் காங்கிரஸ் அதிக தொகுதிகளை எதிர்பார்க்க, அதை ஏற்க பாஜக முன்வரவில்லை. புதிதாக வந்திருக்கும் லட்சிய ஜனநாயக கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக விரும்பிய போதும், அதை ஏற்க முதல்வர் ரங்கசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் ஏற்பட்ட இழுபறி, தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு முடிவு வந்து என்ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளில், பாஜக 10 இடங்கள், அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி தலா 2 இடங்கள் என கூட்டணி இறுதியானது.
இண்டியா கூட்டணி
இதேபோன்று, இண்டியா கூட்டணியிலும் முட்டல், மோதல்களுக்கு பஞ்சம் என்பதே இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதிலிலேயே 2 தொகுதிகளில் தனித்து போட்டி என்று முடிவு செய்தது.
யார் தலைமையில் ஆட்சி என்பதில் காங்கிரசும், திமுகவும் கடும் மோதலில் ஈடுபட்டன. இதனால் கூட்டணி உடையும் சூழல் உருவானது. இரண்டு கட்சிகளும் அனைத்து தொகுதிகளிலும் மனுதாக்கல் செய்து அதிரடி காட்டின. விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் மனுத்தாக்கல் செய்தன.
பங்கீடு முடிந்தும் ஓயாத பிரச்னை
பின்னர் ஒருவழியாக காங்கிரசுக்கு 16, திமுக மற்றும் அதனை தோழமை கட்சிகளுக்கு 14 என முடிவானது.
வேட்பு மனுக்களை திரும்ப பெற நேற்று கடைசி நாள் என்ற வகையில், தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வாபஸ் பெற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
திமுக - காங்கிரஸ் நேரடி மோதல்
அதன் அடிப்படையில், காலாப்பட்டு, ராஜ்பவன், மங்கலம், திருபுவனை, காரைக்கால் தெற்கு ஆகிய 5 தொகுதிகளில் திமுக- காங்கிரஸ் கட்சிகள் நேரடியாக மோதுகின்றன.
காங்கிரஸ் - விசிக மோதல்
அதேபோல் உழவர்கரை, ஊசுடு, நெட்டப்பாக்கம், ஏனாமில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
இதற்கு மத்தியில் தட்டாஞ்சாவடி, உழவர்கரை ஆகிய இரு தொகுதிகளில் மனு தாக்கல் செய்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் தட்டாஞ்சாவடியில் மட்டும் வாபஸ் பெற்றுள்ளது. உழவர்கரையில் போட்டியிடுகிறது.
இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலர் சலீம் கூறுகையில், "இத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு புதுச்சேரியில் எங்களின் ஆதரவு இல்லை.
விசிக, மார்க்சிஸ்ட், மதிமுக கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் ஆதரவு அளிப்போம். நல்ல சுயேச்சைகளுக்கும் ஆதரவு தருவோம். வலுவான இண்டியா கூட்டணியை காங்கிரஸ் உடைத்து விட்டது’’ என்றார்.
மார்க்சிஸ்ட் தனித்து போட்டி
கூட்டணிக் குழப்பத்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லாஸ்பேட்டை, திருபுவனை ஆகிய இரு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகிறது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதுச்சேரி மாநில செயலாளர் ராமசந்திரன் கூறுகையில், “கூட்டணிக் கட்சிகளை இணைத்துச் செல்ல திமுக - காங்கிரஸ் இரண்டுமே தவறி விட்டன எனக் குற்றம்சாட்டினார்.
என்டிஏவுக்கு வெற்றி வாய்ப்பு!
புதுச்சேரியில் இண்டியா கூட்டணி நாலாபுறமும் பிரிந்து கிடப்பதால், அங்கு என்டிஏ கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
கருத்துக் கணிப்புகளும் என்ஆர் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று சொல்வதால், இண்டியா கூட்டணி தொண்டர்கள் சோர்வடைந்து காணப்படுகின்றனர்.
==========