India Exports Record 90 Billion Dollar October Piyush Goyal source: google
இந்தியா

”அக்டோபரில் 90 பில்லியன் டாலர் ஏற்றுமதியுடன் இந்தியா சாதனை” 1 டிரில்லியன் டாலர் இலக்கை எட்டுவோம்:பியூஷ் கோயல் நம்பிக்கை!

அக்டோபர் மாதத்தில் இந்தியா 90 பில்லியன் டாலர் ஏற்றுமதியைப் பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Kavitha prasanna

India Exports Record 90 Billion Dollar October Piyush Goyal

அக்டோபர் மாத ஏற்றுமதி சாதனை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி இதுவரை இல்லாத அளவாக சுமார் 90 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைப் பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

45-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் தொடக்க விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், பல முக்கியப் புள்ளிவிவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அக்டோபர் மாத விவரம்

அதன்படி அக்டோபர் மாதத்தின் மொத்த ஏற்றுமதி மதிப்பான 90 பில்லியன் டாலரில், சரக்கு ஏற்றுமதி 50 பில்லியன் டாலராகவும், சேவை ஏற்றுமதி 40 பில்லியன் டாலராகவும் பதிவாகியுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் அக்டோபர் வரையிலான முதல் ஏழு மாதங்களில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 570 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

1 டிரில்லியன் டாலர் இலக்கு

மேலும் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் ஒரு டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை இந்தியா வெற்றிகரமாக எட்டும் என்றும், இந்த ஆண்டு சர்வதேச வர்த்தகம் 15 முதல் 16 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வசூல் சாதனை மற்றும் 2047 பொருளாதார இலக்கு

நாட்டின் உள்நாட்டுப் பொருளாதார வலிமை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் மேலும் பேசினார்.

அப்போது அவர், சமீபத்திய தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் நாடு முழுவதும் வணிக நடவடிக்கைகள் மிகவும் வலுவாக இருந்ததாகவும், உலக அளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக விளங்கும் இந்தியாவில், அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளதுடன், நவம்பர் மாதத்திலும் சாதனை அளவிலான வசூல் பதிவாகும் என்றும் கூறினார்.

30 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்

தற்போது நான்கு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உள்ள இந்தியா, 'வளர்ந்த இந்தியா 2047' தொலைநோக்குப் பார்வையின் கீழ், 2047-ஆம் ஆண்டிற்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற இலக்கு கொண்டுள்ளது.

45-வது இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பால் (ITPO) ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் 45-வது பதிப்பு டெல்லியில் தொடங்கியுள்ளது.

கருப்பொருள் மற்றும் நாட்கள்

'வளர்ச்சி மற்றும் பாரம்பரியம்' என்ற கருத்தாக்கத்துடன் 14 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பங்கேற்றுள்ளன.

கண்காட்சி அம்சங்கள்

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாநிலங்கள் தங்கள் பிராந்திய தயாரிப்புகள், உள்ளூர் தொழில்துறைகள், பாரம்பரிய கைவினைப் பொருள்கள், கலாச்சார பாரம்பரியம் மற்றும் சுற்றுலா வாய்ப்புகளைக் காட்சிப்படுத்துகின்றன.

மேலும், இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உலகளாவிய சந்தைகளுடன் இணைய வெளிநாட்டு வர்த்தகக் கண்காட்சிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

=============