மிரட்டிய இந்திய அணி
India wins Women's World Cup Final: Deepti Sharma crowned 'Player of the Tournament' : உலக கோப்பை மகளிர் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றன. இதையடுத்து, நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தியா 298 ரன்கள் குவிக்க, இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் டாஸ்மின் பிரிட்ஸ் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 23 ரன்களில் ரன் அவுட் ஆனார் பிரிட்ஸ். பீல்டிங்கில் அமன்ஜோத் அபாரமாக செயல்பட்டு ஸ்டம்புகளை தகர்த்தார். அன்னேக்கே போஷ் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்ரீ ஷரணி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.சுனே லுஸ் உடன் இணைந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் லாரா.
101 ரன்கள் குவித்த லாரா
அன்னேரி டெர்க்சன் மற்றும் லாரா இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தனர். ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் அந்த கூட்டணியை பிரித்தார் தீப்தி. அன்னேரி டெர்க்சனை அவர் போல்ட் செய்தார். சதம் கடந்து இந்தியாவின் வெற்றிக்கு தடையாக நின்ற லாரா வோல்வார்ட் விக்கெட்டை அதற்கடுத்து வீசிய ஓவரில் தீப்தி வீழ்த்தினார். அவர் 98 பந்துகளில் 101 ரன்கள் எடுத்தார்.
5 விக்கெட்டுகளை கைப்பற்றிய தீப்தி ஷபாலி
தென் ஆப்பிரிக்க அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நடின் டி கிளர்க் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 9.3 ஓவர்கள் வீசி, 39 ரன்கள் கொடுத்து, 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் தீப்தி. ஷபாலி. , ஸ்ரீ ஷரணி 1 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 52 ரன்களில் வெற்றி பெற்று உலக கோப்பையை முதல் முறையாக வென்றது.
298 ரன்கள் குவித்த இந்தியா
முன்னதாக, இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணிக்காக ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முதல் 10 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி ரன் குவித்தது. அதற்கடுத்த சில ஓவர்களில் பவுண்டரி பதிவு செய்ய முடியாத வகையில் தென் ஆப்பிரிக்க வீராங்கனைகள் பந்து வீசி இருந்தனர்.
அதிரடியாக விளையாடிய ஷபாலி
ஸ்மிருதி மந்தனா 58 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களத்துக்கு வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் இணைந்து 62 ரன்கள் கூட்டணி அமைத்தார் ஷபாலி. 78 பந்துகளில் 87 ரன்கள் அவர் ஆட்டம் இழந்தார். ஜெமிமா 24 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 20 ரன்களிலும், அமன்ஜோத் கவுர் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருப்பினும் மறுமுனையில் தீப்தி சர்மாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. தென் ஆப்பிரிக்க அணியினர் தவறவிட்ட கேட்ச் வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டார்.
6-வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் தீப்தி சர்மாவும், ரிச்சா கோஷும். 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ரிச்சா ஆட்டமிழந்தார். தீப்தி 58 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். ராதா யாதவ் 3 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா காக்கா 3 விக்கெட் வீழ்த்தினார். லாபா, குளோ டிரையான், நடின் டி கிளர்க் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
மகளிர் அணிக்கு 51 கோடி பரிசு
முதன்முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிசிசிஐ சார்பில் 51 கோடி ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி சார்பில் 39.78 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. 2-ம் இடம் பிடித்த தென்னாப்பிரிக்க அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
மகளிருக்கு 300% பரிசுத்தொகை
பிசிசிஐ செயலாளராக இருந்தபோதும், தற்போது ஐசிசி தலைவராக இருக்கும்போதும், மகளிர் கிரிக்கெட்டை ஆடவர் கிரிக்கெட்டிற்கு இணையாக கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெய்ஷா. அதன் ஒருபகுதியாக கடந்த மாதம் தான் மகளிருக்கான பரிசுத் தொகையை 300 சதவீதம் அதிகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
===============