விண்வெளி மையத்தில் சுபான்ஷூ :
இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளி மையத்திற்கு சென்றார்
அவருடன், அமெரிக்கா, ஹங்கேரி, போலந்தை சேர்ந்த 3 வீரர்கள் கடந்த மாதம் 25ம் தேதி விண்வெளி சென்றனர். அவர்கள் பயணித்த டிராகன் விண்கலம் 26ம் தேதி மாலை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
ஆய்வுப் பணிகளில் வீரர்கள் :
14 நாட்கள் பயணமாக சென்றுள்ள அவர்கள் விண்வெளி நிலையத்தில் இருந்தவாறு பல்வேறு ஆய்வுகளை நடத்தினர். அத்துடன் தங்கள் கடைசி பணி ஓய்வு நாளையும் எடுத்துக் கொண்டனர். பூமியில் இருந்து 250 மைல்களுக்கு மேலே இருந்தவாறு விண்வெளி வீரர்கள் 60க்கு மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர்.
ஒரு கோடி கிலோ மீட்டர் பயணம் :
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் நாட்களில் 230க்கும் மேற்பட்ட சூரிய உதயத்தை பார்த்துள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள், சுமார் 1 கோடி அதாவது 96.5 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்திருக்கின்றனர்.
14ம் தேதி பூமிக்கு வருகிறார் சுபான்ஷூ :
சுபான்ஷு சுக்லா வருகிற 14ம் தேதி பூமி திரும்புவார் என்று நாசா அறிவித்து உள்ளது. இந்திய நேரப்படி ஜூலை 14ம் தேதி மாலை 4.35 மணிக்கு டிராகன் விண்கலம் மூலம் பூமியை நோக்கி புறப்படுகிறார்.
17 மணிநேர பயணத்திற்கு பிறகு டிராகன் விண்கலம் கடலில் விழும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. வெற்றி பயணத்தை நிறைவு செய்து பூமிக்கு திரும்பும் விண்வெளி வீரர்களை உற்சாகமாக வரவேற்க நாசா காத்திருக்கிறது.
=====