ஆக்சியம் மிஷன் விண்வெளி பயணம் :
Shubhanshu Shukla Return To Earth Update : பைலட் சுபான்ஷு சுக்லா, கமாண்டர் பெக்கி விட்சன் உட்பட நான்கு பேர் கொண்ட குழு ஆக்சியம் மிஷன் 4 (Ax-4) குழு விண்வெளி மையத்திற்கு கடந்த 25ம் தேதி புறப்பட்டது, 28 மணி நேரத்திற்கு இந்தக் குழுவினர் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர். அதன் பிறகு அவர் தங்களது பணிகளை தொடங்கினர்.
ஆய்வுப் பணிகளில் சுபான்ஷூ சுக்லா :
சுபான்ஷூ சுக்லா தனக்கென ஒப்படைக்கப்பட்ட ஆய்வு பணிகளில் முனைப்பு காட்டினார். பூமியின் ஈர்ப்பு இல்லாத நிலையில் மூளை இரத்த ஓட்டத்தை ஆய்வு செய்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் நேரடி உரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
தான் கொண்டு சென்ற விதைகளை கொண்டு அங்கு நாற்று வளர்த்த சுபான்ஷூ, விண்வெளி விவசாயியாக மாறி சாதித்தார். எடையற்ற நிலையில் முளைக்கும் தாவரங்களின் மரபணு மாற்றங்களை ஆய்வு செய்தார். பூமியிலிருந்து எடுத்து சென்ற விதைகளுக்கு நீர்ப்பாசனம் செய்தார். வேர்,தண்டு வளர்ச்சி மாறுபாடுகளை ஆவணப்படுத்தினார். இந்த மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்டு, அவற்றின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது ஆராயப்படும்.
ட்ராகன் விண்கலத்தில் பயணம் :
15 நாட்களில் இவர்கள் 130 முறை பூமியை சுற்றி வந்திருக்கிறார்கள். சர்வதேச மையத்தில் தங்கியிருக்கும் வீரர்களிடம் இருந்து விடைபெற்ற 4 பேரும், ட்ராகன் விண்கலத்திற்கு இடம் பெயர்ந்தனர். பூமியை நோக்கி நேற்றி மாலை தனது பயணத்தை தொடங்கிய ட்ராகன், படிப்படியாக உயரம் குறைக்கப்பட்டு, இன்று வளி மண்டலத்திற்குள் நுழைந்தது.
உராய்வு காரணமாக, விண்கலத்தைச் சுற்றியுள்ள வெப்பநிலை 1,900°C வரை உயரும். சிறப்பாக தயாரிக்கப்பட்ட வெப்ப கேடயம் இந்தக் கட்டத்தில் குழுவைப் பாதுகாக்கும். வளிமண்டலத்தில் நுழைந்த பிறகு, 5.5 கி.மீ. உயரத்தில் பாராசூட்கள் விரிக்கப்பட்டு, இந்திய நேரப்படி இன்று பிற்பகலில் பாதுகாப்பாக பசிபிக் கடல் பகுதியில் விண்கலம் நீரில் இறங்கி மிதந்தது.
வரலாற்று நாயகன் சுபான்ஷூ :
அங்கு தயாராக இருந்த அமெரிக்க கடற்படை வீரர்கள், விண்கலத்தின் கதவை திறந்து, நான்கு பேரையும் வெளியை அழைத்து வந்தனர். விண்வெளி நாயகனாக வெற்றிப் பயணம் மேற்கொண்டு வரலாறு படைத்த சுபான்ஷூ சுக்லா, விண்கலத்தில் இருந்து வெளியே வந்தார்.
மருத்துவ குழுக்கள் ஆரம்ப கட்ட சோதனைகளை செய்த பிறகு 7 நாட்கள் அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் அப்போது அவர்கள் உடல்நிலை கண்காணிக்கப்படும்.
====