India–Nepal Rail Connectivity Boost: New Train Connects Ayodhya and Janakpur Google
இந்தியா

அயோத்தி – நேபாளம் இடையே நேரடி ரயில் சேவை : பிரதமர் மோடி, பாலேந்திர ஷா தொடங்கி வைத்தனர்!

அயோத்தியில் இருந்து நேபாளத்தின் ஜனக்பூர் தாம் வரை நேரடி ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது...

NARENDRAN K

மோடி – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா இணைந்து தொடங்கி வைத்தனர் :

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்திக்கும், நேபாளத்தில் உள்ள ஜனக்பூர் தாம் பகுதிக்கும் இடையே நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக ‘சரயு – கமலா எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் புதிய வாராந்திர ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் சேவையை இன்று (நவம்பர் 23) பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவும் காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தனர்.

அயோத்தி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

604 கி.மீ. தூரம் 19 மணி நேர பயணம் :

அயோத்தி கான்ட் ரயில் நிலையத்திலிருந்து நேபாளத்தின் ஜனக்பூர் தாம் வரை சுமார் 604 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த பயணத்தை நிறைவு செய்ய சுமார் 19 மணி நேரம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் மான்காப்பூர், பஸ்தி, கோரக்பூர், நர்கட்டியாகஞ்ச், ரக்சால், சீதாமர்ஹி, ஷிஷோ, மதுபானி, ஜெய்நகர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் வழியாகச் செல்லும்.

இதன் மூலம் பயணிகள் இடையில் ரயில் மாற வேண்டிய அவசியமின்றி நேரடியாக அயோத்தியில் இருந்து ஜனக்பூர் செல்ல முடியும்.

நவம்பர் 28 முதல் வழக்கமான ரயில் சேவை :

இந்த ரயிலின் வழக்கமான வாராந்திர சேவை வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட உள்ளது.

அதன்படி, அயோத்தி கான்ட் ரயில் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலை 5.50 மணிக்குப் புறப்படும் ரயில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.40 மணிக்கு நேபாளத்தின் ஜனக்பூர் தாம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில், ஜனக்பூர் தாமில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் நேபாள நேரப்படி பிற்பகல் 1.10 மணிக்கு புறப்படும் ரயில், ஞாயிற்றுக்கிழமை காலை 8.10 மணிக்கு அயோத்தி கான்ட் வந்தடையும்.

ராமர் சீதை தொடர்புடைய ஆன்மிக தலங்களை இணைக்கும் ரயில் :

அயோத்தி, ராமர் பிறந்த இடமாகவும், நேபாளத்தின் ஜனக்பூர் தாம், சீதை பிறந்த இடமாகவும் இந்து மரபில் போற்றப்படுகின்றன.

இந்த இரு முக்கிய ஆன்மிக தலங்களையும் நேரடி ரயில் சேவை மூலம் இணைப்பது ராமாயண சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்தியா – நேபாளம் இடையிலான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை மேம்படுத்தவும் இந்த ரயில் சேவை முக்கியப் பங்காற்றும் எனக் கூறப்படுகிறது.

==========

=====================