India's First E-Waste-Free District: Kerala's Wayanad Sets New Environmental Benchmark Ai Generated
இந்தியா

இந்தியாவின் முதல் மின்னணு கழிவுகள் இல்லாத மாவட்டமாகும் வயநாடு! : கேரளாவின் புதிய சுற்றுச்சூழல் சாதனை...

இந்தியாவிலேயே முதல் முறையாக மின்னணு கழிவுகள் இல்லாத மாவட்டம் என்ற பெருமையை கேரளாவின் வயநாடு பெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று நவம்பர் 27-ம் தேதி கேரள முதலமைச்சர் வெளியிட உள்ளார்...

NARENDRAN K

மின்னணு கழிவுகள் இல்லாத வயநாடு:

கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டம், இந்தியாவின் முதல் முழுமையான மின்னணு கழிவுகள் இல்லாத மாவட்டமாக உருவெடுக்க உள்ளது.

அறிவியல் பூர்வமான கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில இது முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று நவம்பர் 27-ம் தேதி மாலை 4 மணிக்கு கல்பெட்டாவில் உள்ள சந்திரகிரி அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் வெளியிட உள்ளதாக வேளாண்துறை அமைச்சர் டி. சித்திக் தெரிவித்துள்ளார்.

3 மாதங்களாக நடைபெற்ற சிறப்பு இயக்கம்:

இந்த இலக்கை அடைவதற்காக கடந்த மூன்று மாதங்களாக வயநாடு மாவட்டம் முழுவதும் சிறப்பு இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் தேங்கியிருந்த மின்னணு கழிவுகள் கண்டறியப்பட்டு சேகரிக்கப்பட்டன.

பின்னர், அவை அறிவியல் முறையில் அகற்றுவதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மின்னணு கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நடவடிக்கை :

பயன்படுத்த முடியாத மின்னணு சாதனங்களை முறையற்ற வகையில் அகற்றும்போது, அவற்றில் உள்ள அபாயகரமான வேதிப்பொருட்கள் மண் மற்றும் நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன.

இதனால் மனிதர்களின் உடல்நலத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனை தடுக்கும் வகையில் மின்னணு கழிவுகளை முறையாக சேகரித்து, அறிவியல் அடிப்படையில் மறுசுழற்சி செய்யும் நடவடிக்கைகளை வயநாடு மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

கார்பன் சமநிலை மாவட்டமாக மாற்ற அடுத்த இலக்கு :

வயநாடு மாவட்டத்தை மின்னணு கழிவுகள் இல்லாத பகுதியாக மாற்றுவதுடன் அடுத்தகட்டமாக கார்பன் சமநிலை கொண்ட மாவட்டமாகவும் உருவாக்க கேரள அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும், பிளாஸ்டிக் இல்லாத மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வயநாட்டை உருவாக்குவதற்கான புதிய இயக்கமும் நவம்பர் 27-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. கேரள அரசின் 'நிர்மலம்' கழிவில்லா கேரளா திட்டத்துக்கும் இந்த முயற்சி கூடுதல் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் வயநாடு மாவட்டம் எடுத்துள்ள இந்த முயற்சி, இந்தியாவின் மற்ற மாவட்டங்களுக்கும் முன்னுதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

===================