விமானங்கள் தொடர்ந்து ரத்து
Indian Railways Additional Coaches Due To IndiGo Flight Cancelled : இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இண்டிகோ விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஒருமாத காலத்தில் 1,600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.
கைகொடுக்கும் இந்திய ரயில்வே
இதனால் மற்ற விமானங்களில் கட்டணங்கள் ஜெட் வேகத்தில் உயர்த்தப்படுகின்றன. கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்க முடியாதவர்களின் குறையை இந்திய ரயில்வே போக்கி வருகிறது.
ரயில்களில் கூடுதல் இயக்கம்
நாடு முழுவதும் பயணிகளுக்கு வசதியாக இருக்கவும், போதுமான இருக்கை வசதிகளை உறுதி செய்யவும் சிறப்பு ஏற்பாடுகளை இந்திய ரயில்வே செய்துள்ளது. மொத்தம் 37 ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் நாடு முழுவதும் 114 கூடுதல் பயணங்களை மேற்கொள்கின்றன.
தெற்கு ரயில்வே சாதனை
தெற்கு ரயில்வே அதிகபட்சமாக 18 ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து பயணிகளின் தேவையை பூர்த்தி செய்துள்ளது. அதிக தேவை உள்ள வழித்தடங்களில் கூடுதல் சேர் கார் மற்றும் ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த கூடுதல் வசதிகள் இன்று (டிசம்பர் 6) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
வடக்க ரயில்வே - கூடுதல் பெட்டிகள்
வடக்கு ரயில்வே 8 ரயில்களில் 3ஏசி மற்றும் சேர் கார் பெட்டிகளை இணைத்துள்ளது. இந்த ஏற்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
மேற்கு ரயில்வே
மேற்கு ரயில்வே நான்கு முக்கிய ரயில்களில் 3ஏசி மற்றும் 2ஏசி பெட்டிகளை இணைத்துள்ளது. இந்த கூடுதல் வசதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. மேற்குப் பகுதியில் இருந்து டெல்லிக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மத்திய ரயில்வே ராஜேந்திர நகர் – புது டெல்லி (12309) ரயிலில் ஐந்து பயணங்களுக்கு 2ஏசி பெட்டிகளை கூடுதலாக இணைத்துள்ளது. டிசம்பர் 6 முதல் 10 வரை இந்த கூடுதல் வசதி கிடைக்கும்.
கிழக்கு கடற்கரை ரயில்வே (ECOR) புவனேஸ்வர் - புது டெல்லி (ரயில் எண் 20817 / 20811 / 20823) ரயில்களில் ஐந்து பயணங்களுக்கு 2ஏசி பெட்டிகளை இணைத்துள்ளது. இது ஒடிசா மாநிலத்திற்கும் டெல்லிக்கு உதவியாக இருக்கும்.
கிழக்கு ரயில்வே
கிழக்கு ரயில்வே மூன்று முக்கிய ரயில்களில் ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகளை கூடுதலாக இணைத்துள்ளது. டிசம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் ஆறு பயணங்களுக்கு இந்த வசதி கிடைக்கும்.
சிறப்பு ரயில்களும் இயக்கம்
இந்த ஏற்பாடுகள் மட்டுமின்றி, இந்திய ரயில்வே மேலும் நான்கு சிறப்பு இருக்கை வசதியை அதிகரிப்பது மற்றும் சிறப்பு ரயில்களை இயக்குவது ஆகியவை மூலம் பயணிகளின் தேவையை இந்திய ரயில்வே சிறப்பாக பூர்த்தி செய்து வருகிறது.
=============