பெண்கள் கோரிக்கை, நிறைவேற்றம்
Karnataka Menstrual Leave Policy 2025 in Tamil : கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அரசு, தனியார் என, அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, தேசிய அளவில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதை கேரளா, ஒடிசா, பிகார் ஆகிய மாநில அரசுகள் நிறைவேற்றி செயல்படுத்தி வருகின்றன. அதன்படி,
இந்த மாநிலங்களில் அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு மட்டும் ஆண்டுக்கு 12 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது.
கர்நாடகாவிலும் விடுமுறை அமல்
இதே போன்று, கர்நாடகாவில் பணிபுரியும் பெண்களுக்கும் மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பெங்களூருவில் நடைபெற முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், இதுபற்றி விவாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, 'மாதவிடாய் விடுமுறை கொள்கை 2025'க்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
பணிக்கு செல்லும் பெண்கள் வரவேற்பு
இதுகுறித்து, கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், “ அரசின் திட்டம் மூலம் பெண்களுக்கு ஒரு ஆண்டுக்கு 12 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கும். இந்த விடுமுறையை அவர்களின் மாதவிடாய் சுழற்சியின்படி எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க : Karnataka : காங்கிரஸ் MLA வெற்றி செல்லாது : உயர்நீதிமன்றம் அதிரடி
விடுமுறை திட்டம் உடனே அமல்
இதன் மூலம் நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் பணிபுரியும் பெண்களுக்கு ஆண்டுக்கு 12 நாட்கள் மாதவிடாய் விடுமுறை வழங்கப்பட உள்ளது.இந்தத் திட்டத்தை இந்த ஆண்டே அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்திருக்கிறது.
=================