வளம் கொழிக்கும் காவிரி :
Mekedatu Dam Issue : கர்நாடாகவில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தமிழகத்தின் வழியாக பயணித்து கடலை அடைகிறது. காவிரி மூலம் கிடைக்கும் தண்ணீரை பெற்று கர்நாடகம், தமிழகம், புதுச்சேரியில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் திகழ காவிரி முக்கிய காரணம். அதிக அளவில் தண்ணீரை எடுக்கும் பொருட்டு, காவிரி குறுக்கே கர்நாடகம் பல அணைகளை கட்டி நீரை தேக்கி வருகிறது. இதனால், தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதில்லை.
மேகதாது அணை :
அதிக அளவில் மழைப்பொழிந்து, அணைகள் நிரம்பினால், உபரிநீர் முழுவதும் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. இதனிடையே தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதில் கர்நாடகா தீவிரமாக உள்ளது.ராமநகர் மாவட்டம், மேகதாது என்னும் இடத்தில் இந்த அணை கட்டப்பட இருக்கிறது.
அணை கட்டும் பணிகள் தொடக்கம் :
இந்த அணை கட்டப்பட்டால் பெங்களூரு, ராமநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது, உபரிநீர் வீணாகாமல் தடுக்கப்படும் என்பது கர்நாடகாவின் வாதம். இதற்காக அம்மாநில அரசு 1,000 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கி உள்ளது.
தமிழகம் புதுச்சேரி எதிர்ப்பு :
புதிய அணை கட்ட தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கும் தொடர்ந்துள்ளது.
தமிழகத்தின் கடும் எதிர்ப்பினை மீறி, மேகதாது அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகள் தொடங்கி விட்டதாக கர்நாடகா துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு பிடிவாதம் :
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, ” கர்நாடகாவில் தற்போது 6 சதவீதம் பாசன பகுதிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. கபினி அணையில் இருந்து பெறப்படும் உபரிநீரை பயன்படுத்தி, விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேகதாது அணை கட்டும் அடிப்படை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அணை கட்டி முடித்தால் கர்நாடகத்தில் குடிநீர் பஞ்சம் முழுமையாக நீங்கி விடும். உபரிநீர் கடலில் வீணாவதை தடுக்கவே அணை கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.
திமுக அரசு மவுனம் :
அணை கட்டுமான பணிகளுக்காக நிலம் கணக்கீட்டு பணிகள் நிறைவு பெற்று, கையகப்படுத்தும் பணிகளும் தொடங்கப்பட்டு உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. அப்போதும் தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
தற்போது அம்மாநில அமைச்சரே மேகதாது அணைக்கான பணிகள் தொடங்கி விட்டதாக அறிவித்த நிலையிலும், திமுக அரசு எந்தவித பதில் வினையும் ஆற்றாமல் மவுனம் காக்கிறது. இண்டியா கூட்டணியில் கர்நாடகத்தை ஆளும் காங்கிரசும், திமுகவும் அங்கம் வகிப்பது குறிப்படத்தக்கது.
=============