Kerala has become first poverty free state in India to eradicate extreme poverty https://x.com/pinarayivijayan?ref
இந்தியா

தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலம் கேரளா: பினராயி விஜயன் பெருமிதம்

Kerala Become First Poverty Free State in India : இந்தியாவில் தீவிர வறுமையை ஒழித்த முதல் மாநிலமாக கேரளா மாறியிருக்கிறது.

Kannan

தீவிர வறுமை ஒழிப்பு

Kerala Become First Poverty Free State in India : மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் கேரள மாநிலம் உருவான தினம் இன்று. இது தொடர்பாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் பினராயி விஜயன், “கேரள மாநிலம் உருவான தினமான இந்த நாள் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஏனெனில் கேரளாவை தீவிர வறுமை இல்லாத முதல் இந்திய மாநிலமாக மாற்றுவதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

வளர்ச்சி அடைந்த கேரளா

இந்த சட்டப்பேரவை பல வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் மற்றும் கொள்கை அறிவிப்புகளைக் கண்டுள்ளது. வளர்ச்சியடைந்த கேரளாவை உருவாக்குவதில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் தருணத்தில் சட்டப்பேரவை இன்று கூடியுள்ளது.

வாக்குறுதியை நிறைவேற்றினோம்

2021ம் ஆண்டு புதிய அமைச்சரவை பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்று தீவிர வறுமை ஒழிப்பு. சட்டப்பேரவை தேர்தலின் போது மக்களுக்கு அளிக்கப்பட்ட மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்கான தொடக்கமாகவும் அது அமைந்தது” என்றார்.

100 சதவீதம் கல்வி அறிவு

இந்தியாவில் 100 சதவீத கல்வியறிவை அடைந்த முதல் மாநிலம், டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற முதல் மாநிலம் மற்றும் முழுமையாக மின்சாரம் பெற்ற மாநிலம் ஆகிய பெருமைகளை பெற்ற கேரளா, மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்க பல்வேறு முயற்சிகளை எடுத்தது.

1,000 கோடியில் தினசரி உணவு

ரூ.1,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டில், கேரள மாநில அரசு 20,648 குடும்பங்களுக்கு தினசரி உணவை உறுதி செய்தது, அவர்களில் 2,210 பேருக்கு சூடான உணவு வழங்கப்பட்டது. மேலும், 85,721 நபர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆயிரக்கணக்கானோருக்கு வீட்டுவசதி ஆகியவற்றையும் உறுதி செய்தது.

வறுமை ஒழிப்பு திட்டங்கள் வெற்றி

தீவிர வறுமையை ஒழிக்கும் நோக்கில் 5,400க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட்டன. 5,522 வீடுகள் பழுதுபார்க்கப்பட்டன. 2,713 நிலமற்ற குடும்பங்கள் வீடு கட்ட நிலம் கொடுக்கப்பட்டது. இது தவிர, 21,263 பேர் முதல் முறையாக ரேஷன் கார்டுகள், ஆதார் மற்றும் ஓய்வூதியம் போன்ற அத்தியாவசிய ஆவணங்களைப் பெற்றனர். 4,394 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத் திட்டங்கள் முழுமையாக கிடைத்தன.

குடும்பங்கள் அடையாளம் - முழு உதவி

இது வெற்றி பெற முக்கிய காரணம் தீவிர வறுமையை ஒழிக்க ஒரே மாதிரியான கொள்கையை பின்பற்றாமல், பாதிக்கப்பட்ட 64,006 குடும்பங்களை அடையாளம் கண்டு, ஒவ்வொருவரின் தனித்துவமான தேவைகளுக்கும் குறிப்பிட்ட நுண் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தப்பட்டது.

அரசியல் செய்யும் காங்கிரஸ்

ஆனால், இதை ஏற்க மறுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டசபையில் இருந்து வெளியேறி தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தன. கேரளாவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தீவிர வறுமை ஒழிப்பு வெற்றி பினராயி விஜயன் அரசுக்கு கூடுதல் ஆதரவை பெற்றுத் தரும் என்று தெரிகிறது.

=====================