Kishtwar Killings After Kulgam Attack: Security Forces Launch Search Operation Google
இந்தியா

காஷ்மீரில் அடுத்தடுத்து தாக்குதல்! : 2 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை – என்ன நடக்கிறது?

குல்காமில் CRPF வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட அடுத்த நாளே, கிஷ்த்வாரில் காணாமல் போன 2 சிறப்பு காவல் அதிகாரிகள் துப்பாக்கி குண்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்...

NARENDRAN K

கிஷ்த்வாரில் 2 காவல் அதிகாரிகள் உயிரிழப்பு:

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதல் சம்பவங்கள் பாதுகாப்புப் படையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் CRPF வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், தற்போது கிஷ்த்வார் மாவட்டத்தில் காணாமல் போன 2 சிறப்பு காவல் அதிகாரிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டு குழுவில் (Special Operations Group - SOG) பணியாற்றி வந்த பாபி சந்த் மற்றும் ராஷ்பால் குமார் ஆகிய இருவரும் நவம்பர் 11-ம் தேதி பணிக்காகச் சென்றபோது காணாமல் போயுள்ளனர்.

சேவை துப்பாக்கிகளும் மாயம் :

இந்த சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் தங்களுடைய பணிக்காக எடுத்து சென்ற INSAS மற்றும் .303 ரக துப்பாக்கிகளும் காணாமல் போயுள்ளன.

இதனால் இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும், தாக்குதலுக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இதையடுத்து அந்த பகுதியில் ராணுவம், CRPF மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

குல்காம் தாக்குதலுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

இதற்கிடையில், நவம்பர் 11-ம் தேதி தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டம் மிர் பஜார் அருகே உள்ள அக்ரான் பகுதியில் CRPF வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் 3 CRPF வீரர்கள் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் பைக்கில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின.

இந்த இரண்டு சம்பவங்களும் அடுத்தடுத்த நாட்களில் நடந்துள்ளதால் காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் குறித்த கவலை அதிகரித்துள்ளது.

காஷ்மீரில் என்ன நடக்கிறது?

ஒருபுறம் CRPF வீரர்கள் மீது தாக்குதல், மறுபுறம் இரண்டு சிறப்பு காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை என அடுத்தடுத்து நடந்துள்ள இந்த சம்பவங்கள் பாதுகாப்புப் படையினருக்கு புதிய சவாலாக அமைந்துள்ளன.

குறிப்பாக கிஷ்த்வாரின் மலைப்பகுதிகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டறிய பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.