எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு
LPG vending machine: Gurgaon gets 24x7 'gas ATM' that exchanges empty cylinders for filled ones in just 2 minutes, no waiting needed : ஈரான் போரால் சமையல் எரிவாயு நாடு முழுவதும் பேசு பொருளாகி இருக்கிறது. வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இருப்பதால், ஓட்டல்களில் மெனுக்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. பல இடங்களில் உணவகங்கள் செயல்பட முடியாத நிலையும் இருக்கிறது.
வீடுகளுக்கு சப்ளை பாதிப்பு
வீடுகளுக்கான சிலிண்டர்கள் சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளது. புக் செய்த பல நாட்களுக்கு பிறகே சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன. வளைகுடா நாடுகளில் இருந்து எரிவாயு கொண்டு வரும் கப்பல்கள் ஒவ்வொன்றாக இந்தியாவை நோக்கி வந்தாலும், டிமாண்ட் மட்டும் தீரவில்லை.
பொதுமக்களுக்கு நற்செய்தி
இந்தச் சூழலில், டெல்லிக்கு அருகே உள்ள குருகிராம் நகரில் பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் பெரிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
LPG ATM அறிமுகம்
அதன்படி, எரிவாயு தீர்ந்து விடும்போது புக் செய்து விட்டு சிலிண்டருக்காக பல நாட்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் எல்பிஜி ஏடிஎம் குருகிராமில் தொடங்கப்பட்டுள்ளது.
3 நிமிடங்களில் சிலிண்டர்
இதில் வெறும் 2 முதல் 3 நிமிடங்களில் நிரப்பப்பட்ட எரிவாயு சிலிண்டர் கிடைக்கும். இந்த ஸ்மார்ட் இயந்திரம், சோஹ்னா, செக்டர் 33, சென்ட்ரல் பார்க் ஃப்ளவர் வேலியில் நிறுவப்பட்டுள்ளது. இது பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தால் ஒரு முன்னோட்டத் திட்டமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
LPG ATM - இயந்திரத்தின் செயல்பாடு
இந்த இயந்திரம் முற்றிலும் தானியங்கி மற்றும் தொடுதலில்லா முறையில் இயங்கக் கூடியது. வாடிக்கையாளர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொண்டு ஓடிபி (OTP) மூலம் சரிபார்க்க வேண்டும்.
அடுத்து, காலி சிலிண்டரின் கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, டிஜிட்டல் முறையில் (UPI அல்லது கார்டு) பணம் செலுத்த வேண்டும். இந்த செயல்முறை முடிந்ததும், காலி சிலிண்டரை இயந்திரத்தில் வைத்தால், 3 நிமிடங்களில் எரிவாயு நிரப்பப்பட்டு விடும்.
எடை குறைந்த சிலிண்டர்கள்
ஏடிஎம்ல் இருந்து வழங்கப்படும் சிலிண்டர்கள், பாரம்பரிய இரும்பு சிலிண்டர்களிலிருந்து வேறுபட்டவை. இவை ஃபைபரால் செய்யப்பட்ட கலப்பு சிலிண்டர்கள் ஆகும், அவை எடை குறைந்தவை, சுகாதாரமானவை மற்றும் துருப்பிடிக்காதவை.
பாரம்பரிய சிலிண்டர்கள் சுமார் 31 கிலோ எடை கொண்டவையாக இருக்கும் நிலையில், இந்த புதிய சிலிண்டர் 15 கிலோ எடை மட்டுமே கொண்டது, எனவே, இதை கையாள்வது, கொண்டு வருவது சுலபம்.
24 மணிநேர சேவை
அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இயந்திரத்தின் பெரிய நன்மை என்னவென்றால், 24 மணி நேரமும் எரிவாயுவை நிரப்பலாம். எரிவாயு ஏஜென்சிக்காக காத்திருக்க வேண்டியதில்லை.
எந்த நேரத்திலும் சென்று சில நிமிடங்களில் ஒரு புதிய சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம். இந்த இயந்திரம் ஒரே நேரத்தில் 10 சிலிண்டர்களை வைத்திருக்கும் திறன் கொண்டது மற்றும் கையிருப்பு குறைவாக இருக்கும்போது எரிவாயு முகமைக்குத் தானாகவே எச்சரிக்கை செய்யும் வசதியும் உள்ளது.
நாடு முழுவதும் விரிவாக்கம்
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வேகமான, பாதுகாப்பான மற்றும் வசதியான சேவையை வழங்குவதே பிபிசிஎல்நோக்கம். இந்த முன்னோடித் திட்டம் வெற்றி பெற்றால், நாட்டின் பிற நகரங்களிலும் விரைவில் எல்பிஜி ஏடிஎம்கள் பயன்பாட்டிற்கு வரும்.
அவ்வாறு நாடு முழுவதும் LPG ATM-கள் நிறுவப்பட்டால், பணம் எடுக்கும் ஏடிஎம் மையங்கள் போன்று, எரிவாயு சப்ளை சீராக இருக்கும். மக்கள் காத்திருக்க வேண்டிய தேவையே இருக்காது.
=====================