மகாராஷ்டிராவின் முகம் அஜித் பவார்
Ajit Pawar, NCP chief and Maharashtra's Deputy Chief Minister, died in a tragic plane crash this morning : மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சியில் துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகன் இவர்.
மகாராஷ்டிர அரசியலில் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவர் தான் அஜித் பவார். தேசிய அரசியலிலும் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கினார்.
சிறிய ரக விமானத்தில் பயணம்
மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், தனது சொந்த ஊரான பாராமதியில் நடைபெறும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் புறப்பட்டு சென்றார்.
தரையிறங்கும் போது விபத்து
பாராமதி விமான நிலையத்தில் அஜித் பவார் சென்ற விமானம் தரையிறங்க முயற்சித்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது.
மும்பையிலிருந்து 8 மணிக்கு அஜித் பவார் புறப்பட்ட நிலையில், 9.12 மணி அளவில் விபத்து நடைபெற்றது. சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர்.
விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
விமானம் தரையிறங்கும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அஜித் பவார் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அஜித் பவார் உயிரிழந்தார்.
அஜித் பவார் உயிரிழப்பு
இந்த விபத்தில் அஜித் பவார் உட்பட விமானத்தில் பயணித்த ஆறு பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து, மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அஜித் பவார் சென்ற விமான விபத்துக்குள்ளானது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
லியர்ஜெட் 45 - தனியார் விமானம்
அஜித் பவார் பயணித்த விமானம் டெல்லியை தளமாகக் கொண்ட சார்ட்டர் நிறுவனமான VSRக்கு சொந்தமான லியர்ஜெட் 45 என்று தெரியவந்துள்ளது.
பாராமதி விமான ஓடுதளத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்ததால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிய வந்து இருக்கிறது.
அஜித் பவார் - 7 முறை எம்எல்ஏ
சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இருந்து பிளவை ஏற்படுத்தி தனியாக இயங்கினார் அஜித் பவார்.1982ல் தீவிர அரசியலில் நுழைந்த அஜித் பவார் புனே மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவராக 1991ல் தேர்வானார்.
தொடர்ந்து 16 ஆண்டுகள் கூட்டுறவு வங்கி தலைவர் பதவியில் நீடித்தார். மராட்டிய சட்டமன்றத்துக்கு பாராமதி தொகுதியில் இருந்து 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் அஜித் பவார்.
துணை முதல்வராக 6 முறை இருந்தவர்
மராட்டிய துணை முதல்வராக ஆறு முறை பதவி வகித்தவர் அஜித் பவார். 3 ஆண்டுகளுக்கு பிறகு சரத் பவார் கட்சியுடன் இணைய அஜித் பவார் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் விபத்தில் மரணம் அடைந்தார்.
அஜித் பவார் உயிரிழப்புக்கு தேசிய தலைவர்கள், பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருக்கின்றனர்.
=======================