விமானத்தில் நடந்த துயர சம்பவம் :
Flydubai விமானத்தில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தும் அவசரநிலையின்போது அபார துணிச்சலையும், அசாதாரண மனஉறுதியையும் வெளிப்படுத்திய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு Mankind Pharma நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவியை அறிவித்துள்ளது.
அவரது வீரச் செயலுக்கான நன்றியின் அடையாளமாக இந்த தொகை அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்கப்படவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற Flydubai FZ1073 விமானத்தில் 174 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது காக்பிட்டிற்குள் ஏற்பட்ட தாக்குதலில் கேப்டன் ஸ்மித் மச்சார் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், அவர் தனது பொறுப்பை கைவிடாமல் விமானத்தின் கட்டுப்பாட்டை தக்கவைத்ததுடன், அவசரநிலையை சமாளிக்க முக்கிய பங்காற்றினார்.
இதன் பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபுக் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
ஸ்மித் மச்சாரின் துணிச்சலை பாராட்டி Mankind Pharma நிறுவனம் வெளியிட்ட பதிவில், “கேப்டன் ஸ்மித் மச்சார் தன்னை விட தனது விமானப் பணியாளர்கள் மற்றும் ஒவ்வொரு பயணியின் பாதுகாப்பிற்கே முன்னுரிமை கொடுத்தார்.
அதுவே உண்மையான தலைமைத்துவம். எங்களது நன்றியை வெளிப்படுத்தும் வகையில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரூ.1 கோடி வழங்குகிறோம்.
நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்” என்று தெரிவித்துள்ளது.
கேப்டன் ஸ்மித் மச்சாரின் செயல்பாடு இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் அவரது துணிச்சலை பாராட்டியுள்ளனர்.
மேலும், இந்திய விமானிகள் கூட்டமைப்பு (Federation of Indian Pilots) அவருக்கு தேசிய வீர விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
தாக்குதலில் காயமடைந்த கேப்டன் ஸ்மித் மச்சார் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் முழுமையாக குணமடைவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
===============