அமெரிக்காவின் ”BlueBird-6”
America Bluebird Satellite Launch Date in ISRO Sriharikota : அமெரிக்காவை சேர்ந்த ஏ.எஸ்.டி., நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக, 6,500 கிலோ எடையில், 'புளூபேர்ட்' செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது.
அதிவேக இணைய சேவை
இது, தொலைதுார கிராமங்களுக்கு, மொபைல் போன், அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவிகரமாக இருக்கும். இந்த செயற்கைக்கோளை, நம் நாட்டின், 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையம், வணிக ரீதியில் விண்ணில் செலுத்த உள்ளது.
ஸ்மார்போன் நேரடி நெட்வொர்க்
இந்த செயற்கைக்கோள் மூலம், ஸ்மார்ட்போன்கள் விண்வெளியில் இருந்து நேரடியாக நெட்வொர்க் பெற முடியும்.
இந்தியாவின் பாகுபலி ராக்கெட்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்தில் இருந்து, வரும் 24ம் தேதி காலை, 8:54 மணிக்கு, எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட உள்ளது.
எல்விஎம்-3 ராக்கெட் பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. அதற்கு காரணம் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தலாம்.
நாளை கவுன்டவுன்
ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதற்கான கவுன்டவுன் நாளைகாலை தொடங்குகிறது.
24ம் தேதி காலை விண்ணில் பாய்கிறது
செயற்கைகோளை ஏவுதல் 24ம் தேதி காலை 8:54 மணிக்கு நடைபெறும். 6,500 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதன் மூலம், ஏவுதல் உலக விண்வெளி சந்தையில் இந்தியாவின் இருப்பு மேலும் வலிமைப்படுத்தப்படும்.
திருப்பதி கோவிலில் வழிபாடு
இதனிடையே இஸ்ரோ தலைவர் நாராயணன், செயற்கைக்கோளை செலுத்தும் பணி வெற்றி பெற வேண்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
2027ல் சந்திரயான் - 4
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்படும் அமெரிக்க செயற்கை கோள், ககன்யான், சந்திரயான் - 4 திட்டங்கள் குறித்து விளக்கினார். 2027ல் சந்திரயான் - 4 திட்டம் முழுமை பெறும் என்று கூறினார்.
செயற்கைக்கோள் மற்றும் ராக்கெட்டின் சிறப்புகள்
ப்ளூபேர்ட் செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதையை அடைந்த பிறகு ஒரு பெரிய ஆண்டெனாவைத் திறக்கும்.
இதன் அளவு சுமார் 2,400 சதுர அடி. வரை இருக்கும். அப்படி என்றால் அது எவ்வளவு பெரியது என்று கற்பனை செய்ய முடியும்.
இது அந்த நிறுவனத்தின் பழைய செயற்கைக்கோளை விட மூன்று மடங்கு பெரியது.
அதன் தரவு திறன் 10 மடங்கு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இது சாதாரண மக்களின் ஸ்மார்ட்போன்களையும் இணைக்கும், எந்த டவரும் இல்லாமல் நெட்வொர்க்கைப் பெற முடியும்,
எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன் உலகில் ஒரு பெரிய மாற்றம் மற்றும் புரட்சியாக இது பார்க்கப்படுகிறது.
Bluebird 6 செயற்கைக்கோள் 6.5 டன் எடை கொண்டது. பூமியின் மிக அருகே சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட மிகப்பெரிய செயற்கைக்கோள்களாக இது இருக்கும்.
இந்தியாவின் பாகுபலி எனப்படும் LVM3 ராக்கெட் 642 டன் எடையும் 43.5 மீட்டர் நீளமும் கொண்டது.
இது கனரக செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு எளிதில் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க செயற்கைக்கோளை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதன் மூலம், இஸ்ரோவிற்கு பல ஏவுதல்களுக்கான வணிக வாய்ப்புகள் குவியும்.
===================