'எல் நினோ' பாதிப்பு
Super El Nino 2026 : சாதாரண காலங்களில், பசிபிக் கடலில் வீசும் வர்த்தகக் காற்றுகள் வெப்பமான நீரை ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை நோக்கித் தள்ளுகின்றன.
ஆனால், எல் நினோ காலங்களில் இந்தக் காற்றுகள் பலவீனமடையும் போது, பசிபிக் கடலின் வெப்பமான நீர் கிழக்கு நோக்கிப் பரவி, வளிமண்டல சுழற்சியையே தலைகீழாக மாற்றி விடுகிறது. இது இயற்கையின் நிகழ்வு தான்.
தலைகீழான மாற்றங்கள்
கடல் நீரின் அதீத வெப்பம் காரணமாக, பசிபிக் பகுதியில் கனமழை பெய்யும். அதேசமயம், இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில் காற்று கீழ்நோக்கி அழுத்தப்பட்டு, மேகங்கள் உருவாவது தடுக்கப்படும். இதனால் மழை குறையும், கடுமையாக வெப்பம் ஏற்படும்.
இந்த ஆண்டு பெரும் பாதிப்பு
இந்த ஆண்டு ஒரு ராட்சத வடிவெடுக்கப் போவதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஐரோப்பிய நடுத்தர கால வானிலை முன்னறிவிப்பு மையத்தின் (ECMWF) புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டு பூமி ஒரு 'சூப்பர் எல் நினோ' நிகழ்வைச் சந்திக்க இருக்கிறது.
பலவீனம் அடையும் மழைக் காற்றுகள்
எல் நினோ வலுவடையும் போது, அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவிலிருந்து ஈரப்பதத்தைக் கொண்டு வரும் பருவமழைக் காற்றுகள் பலவீனமடைகின்றன. இது பெரிய பாதிப்புகளை படிப்படியாக ஏற்படுத்தும்.
இந்தியாவில் வெப்ப அலைகள்
இதன் காரணமாக வட மற்றும் மத்திய இந்தியாவில் இதுவரை கண்டிராத வகையில் கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும். இயல்பை விட 5 டிகிரி சென்டிகிரேடு வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மழை குறையும், நீர்நிலைகள் காயும்
பருவமழைக் காலத்தில் மழைப்பொழிவு இயல்பை விடக் குறையக்கூடும், இது விவசாயத்தைப் பெரிதும் பாதிக்கும். கடும் வெப்பத்தினால் நீர்நிலைகள் வேகமாகக் காய்ந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஜூனில் தொடங்கும் தாக்கம்
வானிலை மாதிரிகளின்படி, ஜூன் மாதத்திற்குள் கடலின் வெப்பமும் வளிமண்டல மாற்றங்களும் ஒன்றோடொன்று முழுமையாக இணைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு முழுமையான எல் நினோ உருவாவதற்கான முக்கிய அறிகுறி.
பாதிப்புகள் கடுமையாக இருக்கும்
இதற்கு முன்பு 1997-98 மற்றும் 2015-16 ஆண்டுகளில் ஏற்பட்ட வலுவான எல் நினோ நிகழ்வுகள் உலகளவில் வெப்பநிலை சாதனைகளை முறியடித்தன. இந்த ஆண்டும் அதே போன்ற அல்லது அதைவிட மோசமான பாதிப்புகள் இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.
காலநிலையில் பெரும் மாற்றம்
இந்தியாவைத் தவிர்த்து, உலகெங்கிலும் இந்த காலநிலை மாற்றம் எதிரொலிக்கும். அட்லாண்டிக் பெருங்கடலில் புயல்களின் தாக்கம் குறைந்தாலும், மேற்கு பசிபிக் பகுதியில் வழக்கத்தை விட அதிக சூறாவளிகள் உருவாக வாய்ப்புள்ளது.
2026 மிக வெப்பமான ஆண்டு
அந்தவகையில் 2026ம் ஆண்டு உலக வரலாற்றிலேயே வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக அமையக்கூடும்.
இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்
இந்தியாவைப் பொறுத்தவரை, வரப்போகும் மாதங்கள் ஒரு பெரிய சவாலாக இருக்கப் போகின்றன. தகிக்கும் வெப்பத்தைச் சமாளிக்க இப்போதே தற்காப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
=================