Minister L Murugan Parliament Speech About DMK government is obstructing people's right to worship in Thiruparankundran Deepam Issue Case India Parliament House, Delhi
இந்தியா

மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு தடுக்கிறது : எல்.முருகன்!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்றே விளக்கு ஏற்ற வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கி, இந்து சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு நீதிமன்றம் மதிப்பளித்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Baala Murugan

எல்.முருகன் எக்ஸ் பதிவு

Thiruparankundran Deepam Issue Case : இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்துாணில் மகா தீபம் ஏற்றும் விவகாரத்தில் தொடக்கம் முதலே மோசடி நாடகம் நடத்தி இந்துக்கள் முதுகில் குத்தியதற்கு முழு பொறுப்பு முதலமைச்சர் . மு. க. ஸ்டாலினும், திமுகவும் தான் என தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலையில் பாரம்பரியமாக ஏற்றப்படும் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பது முருக பக்தர்களின் நீண்டகால ஏக்கம். இதற்காக இந்துக்கள் நடத்திய போராட்டம் நீண்ட வரலாறு கொண்டது.பெரும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு டிசம்பர் 3-ல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

பின்னால் இருப்பது விரோதம் கொண்ட திமுக

ஆனால், தீபத்தூணில் தீபம் ஏற்ற விடக்கூடாது என்ற திடமான எண்ணம் கொண்ட திமுக அரசு, நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை செயல் அலுவலரை வைத்து மேல் முறையீடு செய்தது.தீபத்தூணில் தீபம் ஏற்ற விடக்கூடாது என்ற முடிவை எடுத்தது செயல் அலுவலரா? அவர் வெறும் அம்பு மட்டுமே. எய்தது யார்? பின்னால் இருப்பது இந்து விரோத எண்ணம் கொண்ட திமுக தலைவரும் முதலமைச்சருமான. மு. க. ஸ்டாலின் தான்.

இந்துக்களை விமர்சிக்க வைத்தார்

அதே சமயம் இந்து விரோத அறநிலையத்துறை வைத்து தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்வதாக முதலமைச்சர் நாடகம் நடத்தியுள்ளார். காலையில் இந்துக்கள் நீதிமன்றத்தை அணுகிய போது மாலை 6 மணி வரை நேரம் இருக்கிறதே என அப்போது அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக அதிகாரத்தில் இருக்கும் முதலமைச்சர் ஏதும் பேசவில்லை. ஆனால், குயுக்தியுடன் தனது கூட்டணி கட்சியினரை தூண்டிவிட்டு இந்துக்களின் நம்பிக்கையை கேவலமாக விமர்சிக்க வைத்தார்.

ஆன்மிக நம்பிக்கையை தகர்க்கவே அறநிலையத்துறை

அதோடு, நீதிபதி பற்றியும் தகாத முறையில் அவர்கள் பேசினர். இறுதியாக, திருப்பரங்குன்றம் தீபத் தூணில் எப்படியும் மகாதீபம் ஏற்ற விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் இந்து விரோத திமுக அரசு கடைசி வரை மகாதீபம் ஏற்றவில்லை.பின்னர், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ஏற்காமல் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தியது.

வழக்கை மீண்டும் நீதிமன்றம் கொண்டு சென்று தாமதம் செய்யும் கண்ணாமூச்சி விளையாட்டை முதலமைச்சர் செய்கிறார். இந்துக்களின் பணத்தை சுரண்டி கொள்ளையடிக்கவும் ஆன்மீக நம்பிக்கையை தகர்க்கவுமே திமுக ஆட்சியில் அறநிலையத்துறை செயல்படுகிறது.

மலைமீது தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் அறநிலையத்துறை தொடர்ந்த மேல் முறையீடு மனுவினை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்து நியாயத்தை உறுதி செய்துள்ளது.

மேலும், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்றே விளக்கு ஏற்ற வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி, இந்து சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், இந்து விரோத போக்கு கொண்ட திமுக அரசிற்கு நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அவையில் பேசிய எல்.முருகன்

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை தமிழ்நாடு அரசும், போலீசாரும் மதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய அவர், சிஐஎஸ்எஃப் பாதுகாப்போடு சென்ற போதும் தீபத்தை ஏற்ற விடவில்லை என்றும் தீபத்தை ஏற்ற சென்றவர்களைக் கைது செய்து அராஜக போக்கை திமுக அரசு கடைப்பிடிக்கிறது.

மக்களின் வழிபாட்டு உரிமையை திமுக அரசு தடுக்கிறது என்றும் தெரிவித்தார். வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக அரசு இதுபோல செயல்படுகிறதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். திருப்பரங்குன்றத்தில் அங்குச் சட்ட ஒழுங்கு முழுமையாகச் செயலிழந்து விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இவரின் வாதத்திற்கு திமுக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டு சலசலப்பை ஏற்படுத்தினர்.

======