Ministry of Petroleum has completely removed controls on commercial cylinders AI generated
இந்தியா

வர்த்தக சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம் : "ஓட்டல், தொழிற்சாலைகளுக்கு 100% Supply" : பொதுமக்கள் நிம்மதி....!

வர்த்தக சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாட்டை முழுமையாக நீக்கி இருக்கிறது பெட்ரோலியத்துறை அமைச்சகம்.

Kannan

ஈரான் போர்

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய தாக்குதலால் போர்மேகம் சூழ்ந்து, பதற்றம் நிலவியது.

எரிபொருள் தட்டுப்பாடு

ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலக அளவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சரக்கு கப்பல்கள் செல்ல முடியாததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

90% இறக்குமதி செய்யும் இந்தியா

இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எரிவாயு தேவையில் சுமார் 90 சதவீதம் மேற்கு ஆசிய நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், பொதுமக்களின் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, மத்திய அரசு அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வர்த்தக சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு

அதன்படி, வர்த்தக ரீதியிலான எல்பிஜி விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டு, அந்த எரிவாயு வீட்டு உபயோகத்துக்குத் திருப்பி விடப்பட்டது.

ஓட்டல் தொழில் பாதிப்பு

இதன்காரணமாக வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்ததோடு, நாடு முழுவதும் ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல நகரங்களில் ஓட்டல் மூடப்பட்டன. விறகு அடுப்பிற்கு மாறி வேண்டிய நிலைக்கு ஓட்டல்கள் தள்ளப்பட்டன.

விலை உயர்வு, பொதுமக்கள் பாதிப்பு

இந்த தட்டுப்பாடு விலையேற்றத்திற்கும் வழி வகுத்தது. உணவுப் பொருட்களின் விலையை ஓட்டல்கள் உயர்த்தியதால், படிக்க, வேலை பார்க்க நகரங்களில் தங்கி இருக்கும் பேச்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

முடிவுக்கு வந்த ஈரான் போர்

100 நாட்களுக்கு பிறகு ஒருவழியாக ஈரான் போர் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக நிலைமை சீராகி வருகிறது. ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை ஈரான் தளர்த்தி விட்டது.

போக்குவரத்து சீரானது.

இதனால், 30க்கும் மேற்பட்ட இந்திய சரக்கு கப்பல்கள் அந்த வழியை கடந்து வந்துள்ளன. மேலும் 26 கப்பல்கள் கடக்க உள்ளன.

இதனிடையே நிலைமை சற்று சீரானதால், 70 சதவீதம் வணிக சிலிண்டர் விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும், சில துறைகளுக்கு 50 சதவீத கட்டுப்பாடுகள் நீடித்து வந்தன.

கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்

தற்போது உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாலும், எல்பிஜி சரக்குக் கப்பல்கள் இந்தியாவுக்கு அடுத்தடுத்து வரவிருப்பதாலும் இந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படுவதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

100% சப்ளை உறுதியானது

அதன்படி, ஓட்டல் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வர்த்தகப் பயன்பாட்டு சிலிண்டர்களுக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு, 100% விநியோகம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்த ‘பல்க் எல்பிஜி' விநியோகம், தற்போது 50 சதவீத அளவுக்கு தளர்த்தப்பட்டு சப்ளை தொடங்கப்பட்டுள்ளது.

தொழில்துறையினர் நிம்மதி

தினசரி எல்பிஜி உற்பத்தி 40,000 டன்களுக்குக் குறையாமல் இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் தொழில் மற்றும் வர்த்தகத் துறையினருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

ஓட்டல்களுக்கு முழு சப்ளை

வர்த்தக சிலிண்டர் சப்ளையில் இனிமேல் எந்த கட்டுப்பாடும் இல்லை. ஓட்டல், தொழிற்சாலைகளும் வரவேற்று இருக்கின்றன. இனி உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு வராது என்பதால், பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

===========================