https://x.com/ceobihar?lang=th
இந்தியா

ஸ்மார்ட்போன் மூலம் வாக்குப்பதிவு : பீகார் தேர்தலில் அறிமுகம்

முதன் முறையாக மின்னணு முறையில் ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கும் முறை, பீகார் சட்டமன்ற தேர்தலில் அறிமுகம் செய்யப்படுகிறது.

Kannan

இந்தியாவில், நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் மக்களவை தேர்தலில் சுமார் 100 கோடி பேர் வாக்களிக்கின்றனர்.

வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்பட்டு வந்த தேர்தல்கள், நவீனத்தின் அடுத்தக் கட்டமாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், அவற்றுக்கு சரியான விளக்கம் கொடுக்கும் தேர்தல் ஆணையம், மிகச் சிறந்த கட்டமைப்புகளோடு, தேர்தல்களை நடத்தி வருகிறது.

பீகார் மாநிலத்தில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி உள்ள தேர்தல் ஆணையம், நாட்டிலேயே முதன்முறையாக ஸ்மார்ட்போன் மூலம் வாக்களிக்கும் முறையை அறிமுகம் செய்கிறது.

இதற்கான முன்முயற்சி வரும் 28ம் தேதி அம்மாநிலத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதுபற்றி விளக்கம் அளித்த பீகாம் மாநில தேர்தல் ஆணையர் தீபக் பிரசாத், “மின்னணு முறையில் மொபைல் மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கும் செயல்முறை இரண்டு ஆண்ட்ராய்டு மொபைல் செயலிகள் மூலம் செயல்படுத்தப்படும்.

இதற்காக C-DAC மையம் ‘e-Voting SECBHR’ என்ற செயலியை வடிவமைத்துள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் சார்பிலும் ஒரு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் பத்தாயிரம் வாக்காளர்கள் மின்னணு முறையில் மொபைல் போனை பயன்படுத்தி வாக்களிக்க பதிவு செய்துள்ளனர்.

இந்த முறையின் கீழ் சுமார் ஐம்பதாயிரம் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு செல்லாமல் மொபைல் போன் மூலம் வாக்களிக்க முடியும்.

குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், மூத்த குடிமக்கள், தீவிர உடல்நிலை பாதிப்பு கொண்ட வாக்காளர்கள் இதன் மூலம் வாக்களிக்கலாம்.

எதிர்காலத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்க செய்யும் என எதிர்பார்க்கிறோம்.

மொபைல் போன் மூலம் வாக்களிக்கும் இந்த நடைமுறையில் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மின்னணு முறையில் வாக்குப்பதிவு செய்யும் போது தற்போது விவிபாட் அம்சம் போல யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் அறியலாம்.

மொபைல் போன் மூலம் வாக்களிக்கும் போதும் அதே போல சரிபார்க்கும் முறையும் இதில் உள்ளது.

வாக்குப்பதிவு சார்ந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்வதில் பீகார் தேர்தல் ஆணையம் முன்னோடியாக திகழ்கிறது.

மொபைல் மூலம் வாக்களிக்க பதிவு செய்வது எப்படி? -

இது தொடர்பாக ‘e-Voting SECBHR’ செயலியை பயன்படுத்த வாக்காளர் அடையாள அட்டையின் எண், வாக்காளரின் மொபைல் எண்ணுக்கு மொபைல் மூலம் வாக்கு செலுத்துவதற்கான அக்சஸ், செல்ஃபி கேமரா அக்சஸ் அவசியம்.

ஒரு மொபைல் போன் சாதனத்தில் இருந்து அதிகபட்சமாக இரண்டு வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யலாம்.

மொபைல் மூலம் வாக்குப்பதிவு செய்ய பதிவு செய்த மொபைல் சாதனத்தில் இருந்து மட்டுமே வாக்களிக்க முடியும்.

மொபைல் மூலம் வாக்களிப்பது எப்படி? -

ஸ்மார்ட்போனில் ‘Vote’ என உள்ள பட்டனை பதிவு செய்த வாக்காளர்கள் க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு அதில் வரும் அறிவுறுத்தலை கவனமாக வாசிக்க வேண்டும்.

தங்களது வாக்காளர் விவரங்களை பகிர்வதற்கான சம்மதத்தை உறுதி செய்ய வேண்டும்.

பின்னர் வாக்காளர் அடையாள அட்டை எண், மொபைல் எண்ணை கொடுத்து ‘சப்மிட்’ செய்ய வேண்டும்.

அது சரிபார்க்கப்பட்ட பின்னர் ‘Device Authenticated’ என்ற மெசேஜ் வரும்.

பின்னர் வாக்காளர் தனது செல்ஃபி புகைப்படத்தை ரியல் டைமில் அந்த செயலியை பயன்படுத்தி எடுத்து, சமர்ப்பிக்க வேண்டும்.

சரிபார்க்கப்பட்ட பின்னர் வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யலாம்.

வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு வலது பக்கம் உள்ள ‘Vote’ என்ற பட்டனை க்ளிக் செய்து வாக்களிக்கலாம்.

பின்னர் 20 விநாடிகள் வரை யாருக்கு வாக்களித்தோம் என்ற விவரத்தை ‘விவிபாட்’ அம்சம் போன்ற அம்சத்தின் மூலம் வாக்காளர்கள் அறிய முடியும்.

வெற்றிகரமாக வாக்கு செலுத்தியது தொடர்பாக வாக்காளரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தியும் வரும்” என்று தெரிவித்தார்.

====