பாரத் பந்த் - நாடு தழுவிய போராட்டம் :
மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பின் பேரில் இன்று பாரத் பந்த் என்று அழைக்கப்படும் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிரான செயல்பாடு, பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளை கண்டித்து, 10க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது.
கேரளா, ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு :
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பந்த் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 25 கோடி பேர் போராட்டங்களில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டது. கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் ஆங்காங்கே மக்களின் இயல்புநிலை பாதிக்கும் அளவுக்கு பந்த் நடைபெற்றது. சாலை மறியல், ரயில் மறியல், கடையடைப்பு போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஒடிசா மாநிலத்தில் தொழிற்சங்கத்தின் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களை நடத்தினர். கேரளாவில் பெரும்பாலான நகரங்களில் கடைகள் மூடப்பட்டன. ஆங்காங்கே கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டன. எர்ணாகுளம் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்து வாகனங்கள் மட்டுமல்லாது தனியார் வாகனங்களும் இயக்கப்படவில்லை. தலைநகர் திருவனந்தபுரத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
மேற்கு வங்கத்தில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. அரசு பேருந்துகளும் இயக்கப்படாததால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தெலங்கானாவில் தினக்கூலி தொழிலாளர்கள் வேலை இன்றி காத்திருக்கும் நிலை உருவானது.
தமிழ்நாட்டில் இயல்புநிலை, பாதிப்பில்லை :
தெலங்கானாவில் பந்த் காரணமாக வேலை இல்லாததால் தினக்கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் போக்குவரத்து பாதிக்கவில்லை: பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து இருந்தாலும், போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. கடைகள் அனைத்தும் திறந்து இருக்கின்றன.
தமிழகத்தில் ஆளும் திமுகவின் தொழிற்சங்கமான தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இருந்தன. ஜாக்டோ - ஜியோ, வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மாநில மையம், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் இணைந்தன. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.
புதுச்சேரி ஸ்தம்பித்தது :
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் பந்த் நடைபெற்றது. கடைகள் அடைக்கப்பட்டு தனியார் பேருந்து ஆட்டோ டெம்போக்கள் ஓடவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. திரையரங்கு,மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தன.சிறிய கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை மூடப்பட்டதால், மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
=====