பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக, 2020ம் ஆண்டு பிப்ரவரியில், மத்திய அமைச்சர் நட்டா பொறுப்பேற்றார். அக்கட்சி விதிகளின்படி, தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே.
பாஜக தேசியத் தலைவர் :
ஆனால் மக்களவை தேர்தலை கருதி, நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
குஜராத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நட்டா, மத்திய அமைச்சராக பதவியேற்றார். தற்போது அவர், சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்தநிலையில், பாரதிய ஜனதா கட்சிக்கு விரைவில் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது.
கட்சித் தலைவராக ஒரு பெண் :
இந்த முறை கட்சியின் தலைவராக பெண் தலைவர் ஒருவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நீண்ட காலமாக பேசப்படுகிறது. அந்த வகையில் கட்சியின் முன்னணித் தலைவர்கள் மத்தியில் மூன்று பேரின் பெயர்கள் தீவிரமாக பரிசீலிக்கப்படுகின்றன.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், ஆந்திரா முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவின் மகள் புரந்தேஸ்வரி ஆகியோர்தான் அந்த மூன்று பேர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி, ஏற்கனவே பாஜக தேசிய தலைவராக இருந்துள்ளார்.
பெண் தலைமைக்கு ஆர்எஸ்எஸ் அனுமதி :
பாஜக தேசிய தலைவராக ஒரு பெண் தேர்ந்து எடுக்கப்பட, ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பாஜக வெற்றி பெற பெண் வாக்களர்களின் ஆதரவு அதிகம் இருந்ததே காரணம். எனவே, கட்சியின் உயர் பதவிகளில் பெண்கள் வரும்போது, அது பாஜகவுக்கு கூடுதல் பலமாக அமைவதோடு, வெற்றி பெறுவதும் எளிதாக இருக்கும்.
தலைவர் பதவிக்கான போட்டியில் இடம் பெற்றுள்ள இரண்டு பெண்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள், மற்றொருவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். பெண் தலைவர் ஒருவரை நியமிக்கும் நடவடிக்கை பாஜக மேற்கொண்டால், அதன் அக்கட்சியின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் தேசிய தலைவர் என்ற பெயரை பெறும்.
முந்துகிறார் நிர்மலா சீதாரமன் :
ஜே.பி. நட்டாவை அண்மையில் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசி இருப்பதால், அவர் தலைவராக தேர்ந்து எடுப்பதற்கான வாய்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது. அவரது நியமனம் பாஜகவை தென்இந்தியாவில் வளர்க்க உதவும்.
தென் மாநிலங்களில் பாஜக வளர்ச்சி :
நிர்மாலா சீதாராமன் தமிழகத்தில் பிறந்தவர். ஆந்திராவில் திருமணம் செய்துள்ளார். கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்பியாகி உள்ளார். இதுதவிர அண்டை மாநிலங்களான தெலுங்கானா, கேரளாவிலும் நிர்மலா சீதாராமனால் திறம்பட செயல்பட முடியும் என்று பாஜக மேலிடம் உறுதியாக நம்புகிறது.
அதுமட்டுமின்றி லோக்சபாவில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் பாஜக நடவடிக்கைக்கு அவரது நியமனம் வலு சேர்க்கும் என்றும் தெரிகிறது.
=====