மொபைல் ரீசார்ஜ் கட்டண உயர்வு குறித்து நாடு முழுவதும் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் கால் மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள் மட்டுமே கொண்ட கூடுதல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மூத்த குடிமக்கள், சாதாரண செல்போன் பயன்படுத்துபவர்கள் மற்றும் டேட்டா சேவையை அதிகம் பயன்படுத்தாத வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தற்போது பல திட்டங்களில் டேட்டா, கால், எஸ்எம்எஸ் ஆகியவை ஒன்றாக வழங்கப்படுவதால், டேட்டா பயன்படுத்தாதவர்களும் அதிக தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
புதிய வழிகாட்டுதலின் கீழ், கால் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே கொண்ட 30 நாட்கள் அல்லது அதற்கு குறைவான செல்லுபடியாகும் திட்டங்களையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று TRAI தெரிவித்துள்ளது.
இதன் மூலம் குறைந்த செலவில் ரீசார்ஜ் செய்யும் வாய்ப்பு பயனாளர்களுக்கு கிடைக்கும்.
வாடிக்கையாளர்கள் குழப்பமடையாமல் இருக்க, ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் புதுப்பிக்கப்படும் குறைந்தபட்சம் ஒரு திட்டத்தை நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் TRAI கூறியுள்ளது.
இதனால் ரீசார்ஜ் காலாவதி தேதியை கண்காணிப்பது எளிதாகும்.
ரீசார்ஜ் கட்டணத்தை TRAI நேரடியாக நிர்ணயிக்கவில்லை. ஆனால் டேட்டா இல்லாத திட்டங்களுக்கு தனி கட்டண அமைப்பு கொண்டு வரப்படுவதால், தற்போது இருக்கும் திட்டங்களை விட குறைந்த விலையில் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இறுதி விலையை தொலைத்தொடர்பு நிறுவனங்களே முடிவு செய்யும்.
கடந்த சில ஆண்டுகளாக ரீசார்ஜ் கட்டணங்கள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், டேட்டா தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய நடவடிக்கை ஓரளவு நிவாரணம் தரக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதனால் எதிர்காலத்தில் மேலும் மலிவான கால் மற்றும் எஸ்எம்எஸ் திட்டங்கள் சந்தைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
====================