NR Congress begun talks to break away from the NDA alliance in Puducherry and form an alliance with TVK google
இந்தியா

Puducherry Alliance : ”NDAக்கு குட்பை, TVKவுக்கு வெல்கம்” : புது ரூட்டில் ரங்கசாமி, களேபரத்தில் புதுச்சேரி!

Puducherry Alliance 2026 : புதுச்சேரியில் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி அமைக்க, என்ஆர் காங்கிரஸ் பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Kannan

புதுச்சேரி என்டிஏ கூட்டணி ஆட்சி

Puducherry Alliance 2026 : 'யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.2021 தேர்தலில் அமைந்து இந்தக் கூட்டணி, வரும் சட்ட ப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை

என்ஆர் காங்கிரஸ் - பாஜக இடையே கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உடன்பாடு எட்டப்படவில்லை.

ஆனால், 2021 தேர்தலைப்போலவே ஆளும் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 14 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறியிருந்தார்.

ரங்கசாமி விதிக்கும் நிபந்தனைகள்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக்கான உறுதிமொழி, ஜோஸ் சார்லஸ் மார்ட்டினால் தொடங்கப்பட்ட லட்சிய ஜனநாயகக் கட்சியை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற இரண்டு முக்கியமான நிபந்தனைகளை பாஜக தலைமைக்கு என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறி இருந்தார்.

ஆனால், இதை பாஜக தலைமை ஏற்க முன்வரவில்லை எனத் தெரிகிறது.

கூட்டத்தை புறக்கணித்த ரங்கசாமி

இந்த நிலையில், புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெறவதாக இருந்தது. ரங்கசாமி வருகைக்காக, புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான மன்சுக் மாண்டவியா இரண்டு மணி நேரம் காத்திருந்தார்.

ஆனால், ரங்கசாமி புறக்கணித்து விட்டு வராததால், அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை

வேட்புமனு தாக்கல் தொடங்கி விட்ட நிலையில், பாஜகவுக்கு 24 மணி நேரம் கெடு விதித்து இருக்கிறார் ரங்கசாமி. இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழகத்துடன் என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

புது ரூட்டில் ரங்கசாமி

பாஜக நிபந்தனைகளை ஏற்காவிட்டால், தவெகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க முதல்வர் ரங்கசாமி தயாராகி வருகிறார். கூட்டணிக்கு தவெக வருவதாக என்ஆர் காங்கிரசுக்கு வலிமை சேர்க்கும். குறிப்பாக பெண்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆதரவு கிடைக்கும்.

பரபரக்கும் புதுச்சேரி

ஏற்கனவே, இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு களேபரம் நீடிக்கும் நிலையில், என்டிஏ கூட்டணியிலும் பிளவு என்பது, புதுச்சேரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

=====