இந்திய ரயில்வே
உலகின் மிகப்பெரிய போக்குவரத்து பொதுத்துறை நிறுவனமாக கருதப்படும், இந்திய ரயில்வே நாள்தோறும் ஆயிரக் கணக்கான ரயில்களை இயக்கி, கோடிக்கணக்கான மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.
உலகிலேயே லட்சக் கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றும் ஒரே துறையும் இந்திய ரயில்வே தான். நிலக்கரியில் தொடங்கிய இந்திய ரயில்வேயின் பயணம் இன்று ஹைட்ரஜன் எரிபொருள் வரை நவீனமாகி விட்டது.
டிஜிட்டல் மயமான டிக்கெட் விற்பனை
இதேபோன்று, டிக்கெட் விற்பனையும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, பயணிகளுக்கு விரைவான சேவை கிடைக்க வழி வகை காணப்பட்டுள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி, இந்திய ரயில்வேயில் 89 டிக்கெட்டுகள் டிஜிட்டல் மூலமே விற்பனை செய்யப்படுகின்றன. கவுண்டர் விற்பனை என்பது 11 சதவீதமாக சரிந்து இருக்கிறது.
ஜூன் 2025 முதல் ஜூன் 2026 வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 65.08 கோடி முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் விற்பனையாகின.
வெளிப்படையாக ஆன்லைன் முன்பதிவு
மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ், ”ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் கடுமையான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஜூன் 2025 மற்றும் ஜூன் 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் பெரும்பாலான டிக்கெட்டுகள் ஆன்லைன் முன்பதிவு மூலமே நடைபெற்றுள்ளது.
கவுண்டர்களில் டிக்கெட் விற்பனை சரிவு
இக்காலக்கட்டத்தில் விற்பனையான மொத்தம் 65.08 கோடி முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளில், சுமார் 57.90 கோடி டிக்கெட்டுகள் ஆன்லைனிலும், 7.18 கோடி டிக்கெட்டுகள் மட்டுமே ரயில்வே முன்பதிவு மையங்கள் (கவுண்ட்டர்கள்) மூலமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
போலி பயனர்கள் கண்டுபிடிப்பு
ஆதார் எண்ணை இணைக்காததற்காக ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) எந்தவொரு பயனர் கணக்கையும் நீக்கவில்லை.
சந்தேகத்திற்குரிய தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் ஐ.பி (IP) முகவரிகளைக் கொண்டு போலி பயனர் கணக்குகளை ஐ.ஆர்.சி.டி.சி கண்டறிகிறது.
ஜனவரி 1, 2024 முதல் ஜூன் 30, 2026 வரை, 6.68 கோடிக்கும் அதிகமான பயனர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 6.22 கோடிக்கும் அதிகமான கணக்குகள் மீண்டும் மறுபரிசீலனை செய்வதற்காகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஆதார் மூலம் போலிகள் நீக்கம்
போலியான மற்றும் முகவர்களால் இயக்கப்படும் பல பயனர் கணக்குகள் உருவாக்கப்படுவதையும் செயல்படுவதையும் தடுக்க ஆதார் உறுதிப்படுத்தல் (Aadhaar authentication) பெரிதும் உதவியாக இருக்கிறது.
உண்மையான பயணிகளுக்கு டிக்கெட்டுகள் நியாயமான முறையில் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு அமைப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதன் மூலமும், முறையற்ற முன்பதிவு முறைகளைக் குறைப்பதன் மூலமும் உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் எளிதாகக் கிடைக்க ஆதார் இணைப்புப் பயன்பட்டுள்ளது," என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.
மோசடி தடுப்பு நடவடிக்கைகள்
சந்தேகத்திற்குரிய கணக்குகளை நீக்க கடுமையான மறுபரிசீலனை மற்றும் பயனர் கணக்குச் சரிபார்ப்பு
சந்தேகத்திற்குரிய முன்பதிவுகள் குறித்த புகார்கள் தேசிய சைபர் குற்ற இணையதளம் மூலம் கண்காணிப்பு
ஆதார் சரிபார்க்கப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் (Tatkal) டிக்கெட்டுகள் மற்றும் முன்பதிவு கால (ARP) டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதி
====================