Opinion polls shown that Lok Sabha elections are held in current environment, NDA win 324 seats  
இந்தியா

தேர்தல் நடந்தால் ”NDA 324 இடங்களில் வெற்றி” : கருத்துக் கணிப்பு

தற்போதைய சூழலில் மக்களவை தேர்தல் நடந்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணி 324 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

Kannan

2024 - பாஜக 240 இடங்களில் வெற்றி :

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 543 இடங்களில் 240 இடங்களில் மட்டுமே பாரதிய ஜனதா வெற்றி பெற்றது. அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மத்தியில் கூட்டணி அரசு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு நடந்த லோக் சபா தேர்தலில் பாஜ மொத்தம் உள்ள 543 இடங்களில் 240 இடங்களை மட்டுமே பெற்றது. பிகார் முதல்வர் நிதிஷ்குமார்,ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவால் 293 இடங்களுடன் 3வது முறையாக ஆட்சியைப் பிடித்தது பாஜக. அதேசமயம், இந்தியா கூட்டணி 234 இடங்கள் கிடைத்தன.

கருத்துக் கணிப்பு :

இந்த நிலையில், இண்டியா டுடே மற்றும் சி வோட்டர் மூட் இணைந்து, ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்டு 14ம் தேதி வரை தேசிய அளவில் கருத்துக் கணிப்பை நடத்தின. நாடு முழுவதும் 2,06,826 பேரிடம் கருத்துக்கள் பெறப்பட்டன.

இப்போது தேர்தல் - NDA ஆட்சிதான் :

அதன்படி, இன்றைய தேதியில் தேர்தலை நடத்தினால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 324 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணிக்கு 208 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

NDA-வுக்கு ஆதரவு அதிகரிப்பு :

அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்த வரையில் 2024 மக்களவை தேர்தலில் 44 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. தற்போது இது 46.70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 2.70 சதவீதம் கூடுதலாகும்.

அதிக இடங்களில் பாஜக வெல்லும் :

பாஜவை பொறுத்த வரையில 2024 தேர்தலில் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைவாக இருந்தது. தற்போதைய கருத்துக் கணிப்பில் 260 இடங்களில் பாஜக வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

காங்கிரசுக்கு ஓரிரு இடங்கள் குறையும் :

காங்கிரசை பொறுத்த வரையில், 2024 மக்களவை தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது 97 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர், பிகார் ஓட்டு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்குப் பிறகு, பாஜவுக்கு ஆதரவு பெருகி இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

======