திருப்பதி ஏழுமலையான் கோவில்
உலகப் புக.ஃ பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் ஆண்டு தோறும் லட்சக் கணக்கானோர் வருகை தருகின்றனர்.
கோடை விடுமுறை - வருகை அதிகரிப்பு
தற்போது கல்வி நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் திருமலையில் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரத்திற்கும் மேலாகிறது.
இலவச தரிசனம் - முன்னுரிமை
இந்நிலையில் பக்தர்களின் தரிசன நேரத்தை குறைக்க திருப்பதி தேவஸ்தானம் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கும் வகையில் புதிய கொள்கையைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விஐபி தரிசனம் ரத்து
அதன்படி கோடைக்காலத்தில் விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஜூலை மாதம் வரை முக்கிய பிரமுகர்கள் சிபாரிசு கடிதம் மூலம் வழங்கப்படும் விஐபி தரிசனம் கிடையாது.
நேர ஒதுக்கீடு செய்யப்பட்ட சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவதையும் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 6ம் தேதி நடைபெறும் அறங்காவலர் குழு கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.
பக்தர்கள் விரைவாக தரிசிக்க முடியும்
விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டு இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதால் தரிசனம் விரைவாக நிறைவடையும். இதனால் பக்தர்கள் நீண்ட காத்திருப்பது தவிர்க்கப்படுகிறது.
தினமும் 80,000 பேர் தரிசனம்
இதன்மூலம் ஒரு நாளைக்கு 80,000 பேருக்கு மேல் சுவாமி தரிசனம் செய்து வைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தினமும் 2 முதல் 3 மணி நேரம் விஐபி தரிசனங்களுக்காக ஒதுக்கப்பட்டு வருகிறது.
இது ரத்து செய்யப்பட்டால், அந்த நேரத்தில் 15 ஆயிரம் இலவச தரிசன வரிசையில் வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் பெற முடியும்
தொடர் விடுமுறை - வருகை அதிகரிப்பு
மே தினம் சனி, ஞாயிறு தொடர் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள அறைகள் முழுவதும் நிரம்பியது.
பெருமாளை தரிசிக்க 24 மணிநேரம்
இதனால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாத கெங்கம்மா கோயில் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.
=================