புதிய விதிமுறைகள்
IndiGo 400 flights cancelled across airports on today : சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் புதிய பணி நேர வரம்பு விதிகள் அமலுக்கு வந்தன. இதன் காரணமாக இண்டிகோ விமானச் சேவை பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
இண்டிகோ சேவை பாதிப்பு
தொழில்நுட்பக் கோளாறுகள், பாதகமான காலநிலை மற்றும் புதிய பணி விதிகள் ஆகிய இடையூறுகளால் சேவைகள் பாதிக்கப்பட்டதாக இண்டிகோ நிர்வாகம் விளக்கம் அளித்தாலும், அது பயணிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
பயணிகளிடம் மன்னிப்பு கோரிய இண்டிகோ நிர்வாகம், விரைவில் சேவைகள் சரி செய்யப்படும் எனவும் உறுதியளித்திருந்தது. ஆனால், இன்றும் பிரச்சினை தீரவில்லை.
விமானங்கள் தொடர்ந்து ரத்து
நேற்று நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. போதிய அளவில் விமானப் பணியாளர்கள் இல்லாததே இதற்கு காரணம்.
பணியாளர்களின் பணி அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டதால் ஏற்பட்ட குழப்பமும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
400 விமானங்கள் ரத்து
இந்த நிலையில், இன்றும் (டிசம்பர் 5) இண்டிகோ விமானச் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் முக்கிய விமான நிலையங்களில் இருந்து 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பெரு நகரங்களில் தவிக்கும் பயணிகள்
மும்பை, புனே, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் இருந்து 330 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை விமான நிலைய வட்டாரங்களின்படி, இன்று காலை முதல் மொத்தம் 104 விமானங்களும் பெங்களூருவில் இருந்து 102 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹைதராபாத்தில் இருந்து 92 விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை, டெல்லியில் பாதிப்பு
இதுதவிர சென்னை, டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்தும் இண்டிகோ விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிக்கின்றன. . போதிய பணியாளர்கள் இல்லை என்பதால், விமானத்தை இயக்க இண்டிகோவை அனுமதிக்க வேண்டாம் என விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு விமானிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
விமான சேவை குறைப்பு
டிசம்பர் 8ம் தேதி முதல் விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க உள்ளதாகவும் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் சேவை முற்றிலும் சீராகும் எனவும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய அரசு விசாரணை
விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA), இண்டிகோவின் விமான போக்குவரத்து குளறுபடிகள் குறித்து விசாரணையை நடத்தி வருகிறது.
பலமடங்கு உயர்ந்த கட்டணங்கள்
இண்டிகோ விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருவதால், மற்ற விமான நிறுவனங்களில் பயணிக்க கூட்டம் அலைமோதுகிறது. நிலைமையை சமாளிக்க பல நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தி இருப்பதால், பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள்.
இண்டிகோ பங்குகளும் கடும் சரிவு
இந்தியாவிலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பட்ஜெட் விமானச் சேவை நிறுவனங்களில் இண்டிகோவும் ஒன்று. தினசரி சுமார் 2,300 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை அந்த நிறுவனம் இயக்கி வருகிறது. முக்கிய வழித்தடங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
=======