உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நடைமுறையை சிறப்பாக நடத்தி வரும் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள் அமைத்து, ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களை அமர்த்தி, 64 கோடி வாக்காளர்களை வாக்களிக்கச் செய்யும் இமாலய பணியை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தேர்தலின் போதும் செய்து முடிக்கிறது.
வாக்குச் சீட்டுகள் மூலம் தேர்தல் நடந்தபோது ஏற்பட்ட சிரமங்களைத் தவிர்க்க, 1982ம் ஆண்டு முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்மூலம் மிகப்பெரிய தேர்தல் நடைமுறையை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எளிமைப்படுத்தின.
தேர்தல் ஆணையத்தின் அளப்பரிய இந்தப் பணிக்கு எதிராக அரசியல்ரீதியாக சில புகார்கள் அவ்வப்போது எழுந்தாலும், அவை எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
வாக்குப்பதிவில் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்கச் செய்ய, வாக்கு செலுத்தியவுடன் திரையில், நாம் வாக்களித்த கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஒளிரவும், அதற்கான ரசீதுபதிவு செய்யப்பட்டு சேகரமாகும் வகையில் 18 லட்சம் ‘VVPAT’ எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்தியாவின் தேர்தல் நடைமுறையை உலக நாடுகளே வியந்து பாராட்டி வருகின்றன. தேர்தல் ஆணையம் தனது பணியை மேலும் நவீனமாக்கும் வகையில் அலைபேசி செயலி மூலம் வாக்களிக்கும் நடைமுறை பீகார் உள்ளாட்சி தேர்தலில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பாட்னாவில் 3 இடங்கள், ரோத்தஸ் மற்றும் கிழக்கு சம்பரான் பகுதிகளில் தலா 2 இடங்களுக்கு அலைபேசி மூலம் வாக்களிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. 10 ஆயிரம் வாக்காளர்கள் அலைபேசி வழியாக வாக்களிக்க பதிவு செய்து, அதற்குரிய தேர்தல் ஆணையத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து வாக்களித்துள்ளனர்.
இந்த வசதி மூலம் செயலி வழியாகவும், தேர்தல் ஆணையத்தின் இணைய தளம் வழியாகவும் வாக்களிக்க முடியும். மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள், வாக்குச்சாவடிகளுக்கு வர முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படும்.
நவீன காலத்தில் அனைத்தும் அலைபேசி வழியாகவே நடைபெறும் சூழலில், வாக்குப்பதிவையும் இதன்மூலம் நடத்துவதற்கான வெள்ளோட்டம் வெற்றி பெற்று இருக்கிறது.
பிளாக்செயின் தொழில்நுட்பம், முக அடையாள சரிபார்ப்பு, மாற்றங்கள் செய்ய முடியாத ரசீது பதிவு மற்றும் சேகரிப்பு என பல பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளடங்கி இருக்கின்றன.
வரும் காலங்களில் அனைத்து வாக்குப் பதிவுகளும் அலைபேசி செயலி மற்றும் இணையதளம் மூலம் நடைபெறும்போது, இந்திய தேர்தல் நடைமுறை அதிநவீன தொழில்நுட்பத்திலும் உலக சாதனை படைக்கும்.
====