அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், பி.ஜே. மருத்துவ கல்லூரி வளாகத்துக்குள் விபத்துக்குள்ளானது. பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் கல்லூரியின் இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான உணவகத்தில் சமையல்காரராக பணியாற்றும் தாகூர் ரவி, இந்த விபத்தில் தன் தாய் சரளாபேன் பிரலாத்ஜி தாகூர் மற்றும் இரண்டு வயது மகள் அத்யாரவி தாகூர் காணாமல் போயுள்ளதாகக் கூறியுள்ளார்.
"இந்த விபத்திற்கு பிறகு என் தாய், இரண்டு வயது மகளையும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.என் தாய், என் மனைவி மற்றும் நானும் உணவகத்தில் சமையல் செய்து வந்தோம்" என அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
விபத்து நடந்த இடத்திற்கு அருகே வசிக்கும் ஒருவர் ,என் வீடு விபத்து நடந்த இடத்திலிருந்து இருந்து 100–200 மீட்டர் தொலைவில் உள்ளது. நான் வந்தபோது இன்னும் தீ எரிந்து கொண்டிருந்தது. மிகவும் கொடூரமான காட்சி என்றார்.
மற்றொருவர், என் வீடு விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் உள்ளது. பெரிய தீப்பற்றுதல் ஏற்பட்டதாக அறிந்து உடனே விபத்து நடந்த இடத்திற்கு சென்றேன். மிகவும் கொடூரமான காட்சி. எங்கும் எரிந்த உடல்களே காணப்பட்டன என்றார்.