செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர்
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக உருவாக வேண்டும் என்பதற்காக அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய சீர்திருத்தங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
‘சப்ததாரா’ - ஏழு இலக்குகள்
இந்தியாவின் முழுமையான வளர்ச்சிக்காக ‘சப்ததாரா’ (ஏழு திசைகள்) என்ற இலக்கை பிரதமர் முன்வைத்தார். உற்பத்தி, வேளாண்மை, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, பாதுகாப்பு, பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம், உலகளாவிய மென்மையான சக்தி ஆகிய 7 துறைகளில் இந்தியா வேகமாக முன்னேற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி
இளைஞர்களுக்கான இலவசப் போட்டித் தேர்வு பயிற்சி, செயற்கை நுண்ணறிவு பயிற்சி, பெண்களுக்கு 33 சதவீத அரசியல் பிரதிநிதித்துவம், விளையாட்டுத் திறன் தேடல் உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.
1. உற்பத்தியில் உலகத் தரம்
இந்தியாவின் உற்பத்தித் துறையை உலகளவில் போட்டியிடும் அளவுக்கு உயர்த்த வேண்டும்.
குறைந்த செலவு, சிறந்த தரம், அதிக உற்பத்தி ஆகிய மூன்றிலும் கவனம், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகத் தரத்தில் இருக்க வேண்டும்
உதிரிபாகங்கள் முதல் மிகப்பெரிய தொழிற்சாலைகள் வரை முழுமையான உற்பத்திச் சங்கிலியை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும்
2. வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல்
வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் விவசாயத்துக்கும் உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கும் முக்கிய பங்கு
விவசாய உற்பத்தியை அதிகரிப்பதுடன், அறுவடைக்குப் பிறகு உணவுப் பொருட்களை பதப்படுத்தி மதிப்பு கூட்டும் தொழில்களை விரிவுபடுத்த வேண்டும்
3. தொழில்நுட்பம் மற்றும் புதுமை
செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, குவாண்டம் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களில் இந்தியா உலகின் முன்னணி நாடாக மாற வேண்டும்
அடுத்த ஓராண்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன் பயிற்சி
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி வசதிகள், இதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமை குறையும்
4. விரைவான போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு
‘கதி சக்தி’ திட்டத்தின் மூலம் நாட்டின் நகரங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்கள், உள்நாட்டு நீர்வழிகள், துறைமுகங்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து கட்டமைப்புகள் ஒருங்கிணைப்பு
வேகமான ரயில் சேவை, பல்வேறு போக்குவரத்து முறைகளை இணைக்கும் வசதிகள் மற்றும் துறைமுகங்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி ஆகியவற்றில் கூடுதல் கவனம்
5. தற்சார்பு பாதுகாப்புத் துறை
பாதுகாப்புத் துறையில் பிற நாடுகளைச் சார்ந்திருப்பதை குறைத்து, இந்தியாவிலேயே ஆயுதங்கள் மற்றும் நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை உருவாக்குதல்
ட்ரோன்கள், ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட நவீன துறைகளில் இளைஞர்களின் திறனைப் பயன்படுத்த நடவடிக்கை
இந்தியாவை உலகின் முக்கிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக உருவாக்க வேண்டும்
6. பசுமை மற்றும் நீலப் பொருளாதாரம்
சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பொருளாதார வளர்ச்சியை இணைக்க வேண்டும்
பசுமை போக்குவரத்து, பசுமை உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இந்தியா முன்னேற வேண்டும். உலக வெப்பமயமாதலுக்கு தீர்வு வழங்கும் நாடாக இந்தியா உருவாக வேண்டும்
அதேபோல், கடலோர சுற்றுலா, மீன்வளம் உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய வாய்ப்புகள் இருப்பதால் நீலப் பொருளாதாரத்தையும் விரிவுபடுத்த வேண்டும்
7. இந்தியாவின் ‘மென்மையான சக்தி’
யோகா, பாரம்பரிய மருத்துவம், சுற்றுலா, கலை, திரைப்படம், அனிமேஷன், விளையாட்டு, இணையவழி உள்ளடக்கம் உள்ளிட்ட துறைகள் இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை அதிகரிக்கக் கூடியவை
இந்தியாவின் தேசியப் பூங்காக்கள், இயற்கை வளங்கள் மற்றும் கலாச்சாரச் சிறப்புகளை பயன்படுத்தி உலக சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்க வேண்டும்
பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்
பெண்களின் திறனை மதித்து, அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் உரிய பங்களிப்பை வழங்க வேண்டும்
2036 ஒலிம்பிக் இலக்கு: 5 முதல் 15 வயது குழந்தைகளுக்கு திறன் தேடல்
இந்தியா 2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்தவுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்தும் இலக்குடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதற்காக 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளிடம் விளையாட்டுத் திறனை கண்டறியும் நாடு தழுவிய திறன் தேடல் திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்தியா தற்போது பங்கேற்காத அல்லது தகுதி பெறாத பல ஒலிம்பிக் விளையாட்டுப் பிரிவுகளில் கவனம் செலுத்தி புதிய திறமைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
2047-ல் வளர்ந்த இந்தியா
2047-ம் ஆண்டு இந்தியா சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும்போது, ‘வளர்ந்த இந்தியா’ என்ற இலக்கை அடைந்திருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம் என்று பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் 140 கோடி மக்களும் இந்த இலக்கை அடைய தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
தற்சார்பு இந்தியா, உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு, இளைஞர்களின் திறன் வளர்ப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.