PM Modi Feeds Calves During Gujarat Visit; Heartwarming Video Grabs Attention Google
இந்தியா

குஜராத்தில் கால்நடைகளுக்கு உணவளித்து மகிழ்ந்த பிரதமர் மோடி!

குஜராத் மாநிலத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டபோது அங்கிருந்த கன்றுகளுக்கு உணவளித்து மகிழ்ந்தார் ...

NARENDRAN K

கன்றுகளுக்கு பசுந்தீவனம் வழங்கிய பிரதமர் மோடி :

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டம் பில்டி பகுதியில் அமைந்துள்ள பாரத் போவைன் இனப்பெருக்கம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை (Bharat Bovine Breeding and Research Centre) பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அப்போது மையத்தில் வளர்க்கப்படும் கான்க்ரேஜ் உள்ளிட்ட நாட்டு மாட்டு இனங்களையும், கன்றுகளையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து அவற்றுக்கு தனது கைகளால் பசுந்தீவனம் மற்றும் உணவுகளை வழங்கினார். மேலும், கன்றுகளைச் செல்லமாகத் தடவிக் கொடுத்தும் மகிழ்ந்தார்.

ரூ.325 கோடி செலவில் உருவான கால்நடை ஆராய்ச்சி மையம் :

சுமார் 127 ஏக்கர் பரப்பளவில் ரூ.325 கோடி செலவில் இந்த ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

பனாஸ் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தால், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் (NDDB) தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் ஆதரவும் இதற்குக் கிடைத்துள்ளது.

ஆண்டுக்கு 25 ஆயிரம் கருக்கள் உற்பத்தி செய்ய இலக்கு :

இந்த மையத்தில் நவீன கருமுட்டை சேகரிப்பு, செயற்கை கருத்தரித்தல் மற்றும் கரு மாற்றுத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இதன் மூலம் ஆண்டுக்கு 25 ஆயிரம் உயர்தரக் கருக்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கான்க்ரேஜ், கிர், சாஹிவால், தார்பார்கர் உள்ளிட்ட நாட்டு மாட்டு இனங்களின் மரபணுத் தரத்தை மேம்படுத்தி, பால் உற்பத்தியை அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

கால்நடை வளர்ப்போருக்கு என்ன பயன்?

இந்த மையத்தின் மூலம் தரமான காளைகள், விந்தணுக்கள் மற்றும் கருக்கள் கால்நடை வளர்ப்போருக்கு குறைந்த விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

இதனால் குறைந்த எண்ணிக்கையிலான கால்நடைகளை வளர்த்தாலும், அதிக பால் உற்பத்தியைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாகச் சிறு கால்நடை வளர்ப்போர் மற்றும் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

====================